தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 9-ம்தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒருநாள் முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவம்பர் 9) தமிழ்நாடு அரசு ஏற்கெனவே பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னை திரும்பியதும் காய்கறிகள் வாங்க கோயம்பேடு சந்தைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தால், இந்த முக்கியமான செய்தி உங்களுக்கு தான். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 9-ம்தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் சந்தைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது.
சென்னையில் காய்கறி வரத்துக்கு முக்கிய கேந்திரமாக இருப்பது கோயம்பேடு மார்க்கெட். கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை வளாகத்தில் (KWMC) மொத்தம் 3,100 முதல் 3,194 கடைகள் உள்ளன. இதில் குறிப்பாக காய்கறி கடைகள் மட்டும் 1,951 கடைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து 6000 டன் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை மக்களின் தேவை தவிர சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் செல்கிறது.
10 ஆயிரம் பேர் வியாபாரிகள் (காய்கறி வியாபாரிகள் மட்டும் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் ), தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர், தினமும் 6000 வாகனங்கள் வந்துச்செல்லும். ஒட்டுமொத்த கோயம்பேடு சந்தை வளாகத்தில் தினமும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
பல கடைகளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பகிர்ந்து வியாபாரம் செய்வதால், உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சேர்த்து ஆயிரக்கணக்கானோர் இங்கு பணிபுரிகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேட்டின் தினசரி வாழ்வாதாரப் பின்னணியை இது உணர்த்துகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பும் காய்கறி சந்தைக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.
சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் எனப் பலரும் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வழிவகை செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி அன்று வரை காய்கறி கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும், தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 9-ம்தேதி (திங்கள் கிழமை) கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு ஒருநாள் முழு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் சந்தை செயல்படாது என்பதால், வழக்கம்போலக் காய்கறி கொள்முதல் செய்யவோ விற்பனை செய்யவோ முடியாது. குறிப்பாக, கோயம்பேடு சந்தையைச் சார்ந்து காய்கறிகள் வாங்கும் சில்லறை வியாபாரிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திங்கள்கிழமை சந்தை இயங்காது என்பதால், பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை முன்கூட்டியே வாங்கத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
நவம்பர் 10-ம்தேதி செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.