108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த நீதி..!! 12 மணி நேர வேலை 8 மணி நேரமாக குறைப்பு..!

108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைத்து சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
108 ambulance
108 ambulance
Published on

108 ஆம்புலன்ஸ் சேவை என்பது இந்தியாவில் அவசர மருத்துவ உதவி, விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் 24/7 இலவசமாக வழங்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த அவசரக்காலப் பதிலளிப்புச் சேவையாகும். தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நடைமுறைக்கு வந்தது. தற்போது தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படும் நிலையில் 5000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தச் சேவை மூலம், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைவாக (சராசரியாக 18 நிமிடங்களில்) கொண்டு செல்ல முடியும். ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் கிடைக்கும் இந்த சேவை பொதுமக்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசம் செய்யப்படுகிறது.

ஒருவர் அழைப்பது முதல், ஆம்புலன்ஸில் வழங்கப்படும் தேவையான மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வரையிலான முழு சேவையும் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் முற்றிலும் இலவசம்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ் அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை.! ஒரே ஒரு மெசேஜ் போதும்.!
108 ambulance

விபத்துகள், மாரடைப்பு, பிரசவம், மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளுக்கு 108 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த ஆம்புலன்ஸில் நோயாளிக்கு அவசரகால சிகிச்சை அளிக்க நன்கு பயிற்சி பெற்ற அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT) மற்றும் தேவையான உயிர் காக்கும் உபகரணங்கள் (ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், கார்டியாக் மானிட்டர்) இருக்கும்.

இந்தியாவில் தொழிலாளர்களின் சராசரி வேலை நேரம் 8 மணி நேரமாக உள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது.

இந்நிலையில் 12 மணி நேரப் பணி என்ற அடிப்படையில் 2 ஷிப்ட்களில் பணியாற்றும் பணியாளர்கள், பணி நேர குறைப்பு என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அதில் உடன்பாடு எட்டப்படாததால் சென்னை தொழிளாளர் தீர்ப்பாய விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 12 மணி நேரம் பணியாற்றுவதால், தூக்கமில்லாமல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும், 12 மணி நேர பணி என்பது நடைமுறை தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமானது என்றும் 108 ஆம்புலன்ஸ் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், ஆம்புலன்ஸ் நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ. - ஜி.ஹெச்.எஸ்.(EMRI - GHS) தரப்பில், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 12 மணி நேர பணி என்ற நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது என்றும், பணியில் சேரும் ஊழியர்கள் அதை ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும், 12 மணி நேரத்துக்கான ஊதியம்தான் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டதுடன், ஆம்புலன்ஸ் நிறுவனம் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு விதிகளின்படி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமாக பின்பற்றப்படும் 12 மணி நேர பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் இந்த உத்தரவு குறித்து தொழில் தகராறு சட்டத்தின் கீழ் அரசிதழில் அறிக்கை வெளியிட்ட 30 நாட்களில் 8 மணி நேர பணி நடைமுறை அமலுக்கு வரும் என்றும், அதுவரை 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேரத்துக்கான (ஓவர் டைம்) ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! இனி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை..!
108 ambulance

மேலும், 2024-ம் ஆண்டில் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 16% வழங்கப்பட்ட சம்பள உயர்வு 2025-ம் ஆண்டிற்கு பிறகு 10% குறைக்கப்பட்டது. எனவே குறைக்கப்பட்ட ஆறு சதவீத ஊதிய உயர்வை உடனடியாக உயர்த்தி தர வேண்டும் எனவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com