

தமிழ்நாட்டில் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் எண்ணற்ற பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவை வாட்ஸ்அப்பில் கிடைக்கும் படியாக, பிரத்யேகமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த சேவையை தொடக்கி வைத்தார். தமிழ்நாட்டில் EMRI கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனத்தின் மூலம் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் சுமார் 303 ஆம்புலன்ஸ்களில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப் பகுதிகளுக்கு செல்ல 40 பைக் ஆம்புலன்ஸ்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவையில் கிட்டத்தட்ட 7,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
தினந்தோறும் அவசர மருத்துவ சேவை வேண்டி ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, பொதுமக்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
பொதுமக்களின் அழைப்புகள் வந்த உடனே ஆம்புலன்ஸ்கள் விரைவாக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக அழைப்புகள் வந்தவுடன் பெருநகரங்களில் 6.59 நிமிடங்களிலும், நகர்ப்புறங்களில் 9.40 நிமிடங்களிலும், கிராமங்களில் 11.31 நிமிடங்களிலும் மற்றும் மலைப்பகுதிகளில் 13.18 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ்கள் கிடைக்கப் பெறுகின்றன.
இந்த கால அளவை மேலும் குறைக்கும் விதமாக தற்போது நவீன தொழில்நுட்பத்தில் ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது இனி வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களால் பெற முடியும்.
இதற்காக பிரத்தியேகமாக ‘94450 30725’ என்ற வாட்ஸ்அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டால் உங்களின் நிகழ்நேர இருப்பிடம் ட்ராக் செய்யப்பட்டு, அதிவிரைவாக ஆம்புலன்ஸ்கள் வந்தடையும்.
வாட்ஸ்அப்பில் ஆம்புலன்ஸ் சேவையைப் பெறும் வழிமுறை:
* பொதுமக்கள் அனைவரும் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணை, மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
* நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடனேயே Book Ambulance என்ற லிங்க் வரும்.
* இதனை கிளிக் செய்து, உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தைப் பகிர வேண்டும்.
* பிறகு உங்களின் கோரிக்கை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.
* டிரைவரின் பெயர், மொபைல் எண் மற்றும் வாகன எண் ஆகியவை உங்களுக்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும்.
* மேலும் ஆம்புலன்ஸின் வழித்தடத்தையும், எப்போது வந்து சேரும் என்று கால அளவையும் ஆன்லைனில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.