

ஒரு நிலத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் மிகவும் முக்கியமானது பட்டா. ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு பத்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிலத்தின் பல்வேறு தகவல்களைக் கொண்ட பட்டா (Patta) மற்றும் சிட்டாவும் (Chitta) முக்கியம்.
ஒரு நிலத்திற்கு, அது இருக்கும் இடத்தைப் பொறுத்து வருவாய் துறையால் பல்வேறு சானறிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நிலம் சார்ந்த ஆவணங்களுக்கான (Land Documents) விளக்கத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* பட்டா (Patta):
ஒரு நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதற்கு வருவாய் துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணம் தான் பட்டா. ஒரு நிலத்தை விற்கும் போதும், வாங்கும் போதும் பட்டா அவசியம் தேவை.
* சிட்டா (Chitta):
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, எல்லைகள், பயன்பாடு மற்றும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது போன்ற தகவல்களை வழங்கும் வருவாய் துறை சான்றிதழ்.
* பத்திரம் (Deed):
நிலம், வீடு அல்லது வாகனம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சட்டப்பூர்வமாக மாற்றுவதைக் குறிக்கும் மிக முக்கிய ஆவணம் பத்திரம். இதனை சட்டப்படி பதிவு செய்து கொள்வது அவசியம். பதிவு செய்யப்படாத பத்திரங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகாது.
* வில்லங்க சான்று (EC):
ஒரே நிலத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அதாவது ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்ற பிறகும் கூட, அதனை மறைத்து வேறொருவருக்கு விற்பனை செய்யும் மோசடிகளை தெரிந்து கொள்ள பதிவுத் துறையால் வழங்கப்படும் சான்று தான் வில்லங்க சான்றிதழ். நிலத்தின் மீது கடன், வழக்கு மற்றும் அடமானம் போன்ற சுமைகள் உள்ளனவா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆகையால் நிலத்தை வாங்குபவர்கள் வில்லங்க சான்றிதழை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
* அடங்கல்:
ஒரு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் என்னென்ன பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள அடங்கல் சான்று உதவுகிறது. சமீபத்தில் அடங்கல் சான்றை விவசாயிகள் எளிதாக வாங்குவதற்கு ஆன்லைன் வழிமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கிரயம்:
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துவதை கிரயம் என்று அழைப்போம்.
* நன்செய் நிலம்:
விவசாய சாகுபடிக்கு கிணறு மற்றும் போர் உள்ளிட்ட அதிக நீர்ப்பாசன வசதிகளை கொண்டுள்ள நிலம்.
* புன்செய் நிலம்:
சாகுபடிக்கு நீர்ப்பாசனம் செய்ய முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியுள்ள நிலம்.
* கிராம நத்தம்:
ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம், கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்படும்.
* கிராம தானம்:
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலத்தை கிராம தானம் என்று அழைப்பர்.
* தேவதானம்:
கோயில் பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட நிலத்தை தானமாக வழங்குவதை தேவதானம் என்று அழைப்போம்.
* புல எண்:
நில அளவை எண் அல்லது சர்வே எண்.
மேற்குறிப்பிட்டுள்ள நில ஆவணங்கள் பற்றிய தகவல்களை நிலம் வாங்குவதற்கு முன்பு, தெரிந்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். நில ஆவணங்கள் பற்றிய உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.