சமீபத்தில் பெய்த கனமழைக் காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது எப்போ நடந்தது என்று ரஜினி கேட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளம் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலையிலும் இதுவரை பெய்யாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, மூன்று இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
வீடுகள் மண்ணில் புதைந்ததால் ஒரே வீட்டிலிருந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். மூன்று நாட்கள் மீட்பு பணிகள் தொடர்ந்தன. இறுதியில் 7 பேரின் உடல்களும் கிடைத்தன. மண் சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிவாரணம் வழங்கினார். இதுபோல் பல அரசியல் வாதிகளும் நடிகர்களும் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்த நிலச்சரிவு குறித்து ரஜினியிடம் கேட்டபோது, “எப்போ? ஓ மை காட்…” என்று கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவத்தின் போது தமிழகத்தில் சமூக வலைதளம் முழுவதும் செய்திகள் முழுவதும் அதுகுறித்துதான் பேசப்பட்டு வந்தது. ஆனால், இதுகுறித்து ரஜினிக்கு எதுவும் தெரியாததுபோல் ரியாக்ஸன் கொடுத்தது ரசிகர்களை ஆச்சர்யமடைய வைத்திருக்கிறது. பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இதனால் பிஸி லைனப்பில் இருந்து வருகிறார். மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சில படங்கள் ரீரிலீஸ் ஆகவுள்ளன. சில புதுப்படங்களின் அப்டேட்களும் வெளியாகவுள்ளன. இதனால், சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.