இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சமீப காலமாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வராமல் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மீண்டுமொரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. விரைவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் கச்சா எண்ணெயை அதிகளவில் கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்திய மூன்றாவது இடத்தில் உள்ளது.
பெரும்பாலும் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து தான் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வந்தன. இந்நிலையில் அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு ரஷ்யாவிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யக்கூடாது என எச்சரித்தார். இதனை மீறும் நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதனால் தான் இந்தியாவுக்கு கூடுதலாக 50% கூடுதல் வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தியதால், இந்தியாவிற்கு மட்டும் சலுகை விலையில் கச்சா எண்ணையை விற்பனை செய்தது ரஷ்யா. இந்தியாவில் கடந்த 2020-21 இல் ரூ.7,001 கோடியாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 130 கோடியாக உயர்ந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த லுக்ஆயில் மற்றும் ராஸ்நெப்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களின் மீது அமெரிக்கா அதிபர் கடுமையான தடைகளை விதித்துள்ளார். இதன்படி இந்நிறுவனங்களுக்குச் சொந்தமாக அமெரிக்காவில் உள்ள அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன. மேலும் கச்சா எண்ணெய் விற்பனையின் போது, டாலர் பரிமாற்றத்திற்கும் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த இரண்டு நிறுவனங்களுடன் நிதிப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தற்போது தடை செய்யப்பட்ட ரஷ்யாவின் 2 நிறுவனங்களிடம் தான் ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் அறிவிப்பால், இந்த ஒப்பந்தத்தை தற்சமயத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
அதேபோல் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களும் ரஷ்ய நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை விடுத்து, இந்தியா மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிச்சயமாக உயர வாய்ப்புள்ளது.
இருப்பினும் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இது அமையும் என்பதால், என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.