

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் "போனால் போகட்டும் போடா" எனத் தொடங்கும் கவிதை வரிகளைப் பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் சூழலில் முக்கிய பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். திமுகவிலிருந்து வைகோ பிரிந்தபோது அவருடன் சென்றவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் மதிமுகவில் மிக முக்கியமான பேச்சாளராக நீண்ட காலமாக இருந்துவந்த அவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது டிடிவி தினகரனுடன் இணைந்த நிலையில், அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார்.
அரசியல் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் கவனம் பெற்ற நாஞ்சில் சம்பத், கடந்த டிசம்பர் மாதம் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து, அதன் பரப்புரைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கட்சியில் பலருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிரபலமான பேச்சாளரான நாஞ்சில் சம்பத்துக்கு இதுவரை எந்தவொரு முக்கியப் பதவியும் வழங்கப்படவில்லை என்ற விவாதம் அவ்வப்போது பொதுவெளியில் எழுந்து வருகிறது.
இந்தச் சூழலில், அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சிவாஜியின் திரைப்பட பாடல் வரிகளை பதிவிட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடிப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில்,
‘போனால் போகட்டும் போடா...
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...
என்னுடைய பகலை எவரும் இருட்டாக்க முடியாது...
என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது...
என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது’...
என அவர் குறிப்பிட்டிருப்பது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அவரின் இந்த பதிவு, கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படாததால் தவெக தலைமை மீது அவர் அதிருப்தியில் உள்ளாரா என்ற கேள்விகளும், விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
குறிப்பாக, தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பதவி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததைத் தொடர்ந்து இந்தப் பதிவு வெளியாகியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.