

ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பையும் நீண்ட கால சேமிப்பையும் ஒரே பாலிசியின் கீழ் இணைக்க விரும்பும் தம்பதியினருக்கு இப்போது ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி - LIC) தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய ஜீவன் சாத்தி (New Jeevan Saathi) (எல்ஐசி திட்டம்) திட்டங்களை அறிவித்துள்ளது.
எல்ஐசி நியூ ஜீவன் சாத்தி (New Jeevan Sathi) என்பது தம்பதியருக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு ஆயுள் (Joint Life) சேமிப்புத் திட்டமாகும். அதாவது கணவன், மனைவி இருவருக்கும் ஒரே பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீட்டை வழங்கும் ஒரு கூட்டு வாழ்க்கை சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒற்றை பிரீமியம் மற்றும் குறிப்பிட்ட காலம் பிரீமியம் செலுத்தும் திட்டங்கள் உள்ளன.
குடும்ப வருமானத்தைப் பாதுகாப்பதோடு, எதிர்கால இலக்குகளுக்காக ஒரு நிதி இருப்பையும் உருவாக்கும் நிதித் திட்டங்களை அதிகமான குடும்பங்கள் தேடும் நேரத்தில் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.
இந்தத் திட்டம் போனஸ் போன்ற விருப்பப் பலன்கள் இல்லாமல், சேமிப்பையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. பாலிசிதாரர் இறந்தாலோ அல்லது உயிருடன் இருந்தாலோ கிடைக்கும் பலன்கள் உத்தரவாதமானவை மற்றும் நிலையானவை.
இந்த கூட்டு பாலிசி (joint policy) திருமணமானவர்களுக்கு மட்டுமே. எனவே கணவன் மற்றும் மனைவி இருவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். கடந்த ஜூன் முதல் கிடைக்கும் இந்த திட்டத்தின், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.3,00,000 ஆகும். இதில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயது 18, குறைந்தபட்ச முதிர்வு வயது 28 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தை எடுப்பவர்கள் ஒரே பிரீமியத்தில் இரட்டைப் பலனைப் பெறலாம் என்று எல்ஐசி கூறுகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பிரீமியம் தள்ளுபடி சலுகையாகும். இதில், பிரீமியம் செலுத்தும் காலத்தில் ஏற்படும் முதல் மரணத்திற்கான பிரீமியம் தள்ளுபடியும், பாலிசி காலம் முழுவதும் மொத்த வருடாந்திர பிரீமியத்தில் 7% என்ற விகிதத்தில் உத்தரவாதமான கூடுதல் தொகையும் அடங்கும்.
திருமணமான ஒருவர் (அதாவது, முதன்மை காப்பீடு பெற்றவர்) தனது வாழ்க்கைத் துணையுடன் (அதாவது, இரண்டாம் நிலை காப்பீடு பெற்றவர்) கூட்டாக இந்தப் பாலிசியை எடுக்கலாம். இந்தப் பாலிசியின் கீழ், முதன்மை காப்பீடு பெற்றவரே பாலிசிதாரராக இருப்பார். முதன்மை காப்பீடு பெற்றவர் திடீரென மரணமடைந்த பிறகு, இரண்டாம் நிலை காப்பீடு பெற்றவர் பாலிசிதாரராக மாறுவார் என்று எல்ஐசி விளக்கியுள்ளது. அதாவது உயிருடன் இருக்கும் துணைவர், தொடர்ந்து பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியமின்றி, மீதமுள்ள காலத்திற்கு காப்பீட்டின் கீழ் இருப்பார்.
இதில் தேர்வு செய்ய இரு ஆப்ஷன்கள் உள்ளன. விருப்பம் 1-க்கு அதிகபட்ச வயது 60 ஆண்டுகள் மற்றும் பாலிசி காலம் 10, 15, 20, 25 ஆண்டுகள் ஆகும். அதேபோல் விருப்பம் 2-க்கு 35 ஆண்டுகள் மற்றும் பாலிசி காலம் 10, 15, 15 ஆண்டுகள் ஆகும்.
விருப்பம் 1ஐ தேர்ந்தெடுத்தால், காப்பீட்டுத் தொகையானது அடிப்படை காப்பீட்டுத் தொகை அல்லது ஒற்றை பிரீமியத்தின் 1.25 மடங்காக இருக்கும்.
விருப்பம் 2ஐ தேர்வு செய்தால், செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 10 மடங்கு பலன் கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து பிரீமியமும் பலன்களும் மாறுபடும் என்பதாலும், அவற்றை பின்னர் மாற்ற முடியாது என்பதாலும், இந்தத் தேர்வை கவனமாக மேற்கொள்ள வேண்டும் எல்ஐசி அறிவுறுத்தி உள்ளது.
எல்ஐசியின் உதாரணத்தின்படி, 35 வயதுடைய ஒரு திருமணமான தம்பதி விருப்பம் 1-ஐ தேர்ந்தெடுத்து ரூ.3 லட்சம் பாலிசி எடுத்தால், 10 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.3,02,340 பிரீமியமும், 15 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.2,79,180 பிரீமியமும், 20 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.2,52,525 பிரீமியமும், மற்றும் 25 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.2,52,525 பிரீமியமும் செலுத்த வேண்டும்.
அதுவே விருப்பம் 2-ஐ தேர்ந்தெடுத்தால், 10 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.4,27,620 பிரீமியமும், 15 ஆண்டு பாலிசி காலத்திற்கு ரூ.5,36,475 பிரீமியமும் செலுத்த வேண்டும்.
விருப்பம் 1-ஐ தேர்ந்தெடுத்து, ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் 20 ஆண்டு காலத்திற்கு பாலிசி எடுத்தால், அவர்கள் ரூ.812,750 பிரீமியம் செலுத்தம் பட்சத்தில் அவர்களுக்கு, முதிர்வு காலத்தில் ரூ.24,00,000 உத்தரவாதப் பலன்கள் கிடைக்கும். அதுவே பாலிசி காலத்தில் மனைவி அல்லது கணவர் இறந்தால், அவர்கள் முதலில் ரூ.10,52,188 பெறுவார்கள். பாலிசி காலத்தில் மற்றொரு துணைவர் இறந்தால், அவர் இறந்த ஆண்டைப் பொறுத்து நாமினிக்கு ரூ.11,22,188 முதல் ரூ.24,52,188 வரை கிடைக்கும்.
விருப்பம் 2-ஐ தேர்ந்தெடுப்பவர்கள் பிரீமியத்துடன் கூடுதலாகக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
அதாவது பாலிசி காலத்தின் போது கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இறந்தால், எல்ஐசி நிறுவனம், உயிருடன் இருக்கும் மற்றொரு துணைவருக்கு உரிய நிதியுதவி வழங்கும். பாலிசி தொடரும், ஆனால் அடிப்படைத் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய எதிர்கால பிரீமியங்கள் அனைத்தும் அடுத்த பாலிசி ஆண்டு நிறைவிலிருந்து தள்ளுபடி செய்யப்படும். உயிருடன் இருக்கும் துணைவர், தொடர்ந்து பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியமின்றி, மீதமுள்ள காலத்திற்கு காப்பீட்டின் கீழ் இருப்பார் என்று கூறுகிறது.
எல்ஐசி புதிய ஜீவன் சதி (LIC New Jeevan Sathi) சிறப்பம்சங்கள்:
* தம்பதியர் இருவரும் ஒரே பாலிசியில் இணைந்து காப்பீடு பெறலாம்.
* முதிர்வு காலத்தில் உறுதியான தொகையும் (Guaranteed Additions), பாலிசி காலத்தில் தம்பதியரில் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தால், அடுத்தடுத்து செலுத்த வேண்டிய பிரீமியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ஆனால், உயிருடன் இருக்கும் மற்றொருக்கு பாலிசியின் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.
* இது சிங்கிள் பிரீமியம் (ஒரே முறை) மற்றும் லிமிடெட் பிரீமியம் (சில ஆண்டுகள் மட்டும்) ஆகிய இரு முறைகளில் கிடைக்கிறது.
* உத்தரவாதமான வருமானத்தை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
* இந்த பாலிசியானது சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டை ஒருங்கிணைத்து, பாலிசிக் காலத்தில் செலுத்தப்பட்ட மொத்த வருடாந்திர பிரீமியத்தில் 7 சதவீதம் என்ற விகிதத்தில் உத்தரவாதமான கூடுதல் தொகையை வழங்குகிறது.
* முதல் பாலிசி ஆண்டு நிறைவடைந்த பிறகு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் வசதி வழங்கப்படும்.
* விபத்துப் பலன், ஆயுள் காப்பீடு மற்றும் தீவிர நோய்க் காப்பீடு உள்ளிட்ட விருப்பத் துணைத் திட்டங்கள், கூடுதல் பிரீமியத்தில் கிடைக்கும்.
* இந்த திட்டத்தில் ஒருவர் மரணத்திற்குப் பிறகு, உயிருடன் இருக்கும் துணைவருக்கு எதிர்கால பிரீமியம் செலுத்தல்கள் இன்றி காப்பீடு தொடர்வதே இதன் மிகப்பெரிய தனித்துவமான அம்சமாகும்.
ஒரே ஒரு வருமானத்தில் நீண்ட கால நிதிப் பொறுப்புகளைச் சமாளிக்கும் குடும்பங்களுக்கு, இந்த அம்சம் நிதி ரீதியாக கடினமான காலகட்டத்திலும் கூட காப்பீட்டுப் பாதுகாப்பைத் தக்கவைக்க உதவும்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.