

தெற்கு தாய்லாந்தில் , சுங்கை கோலோக் (Sungai Kolok) நகரில் உள்ள சாந்திபாப் மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது திடீரென்று நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் உலகை உலுக்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோலோக் எஃப்ஏ கோப்பை போட்டியில் தாய்லாந்து மற்றும் மலேசியாவை சார்ந்த உள்ளூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டம் நடைபெற்ற போது வானில் இருந்து தோன்றிய ஒரு மின்னல் , கால்பந்து விளையாட்டு வீரரின் மீது தாக்கியது. மின்னல் தாக்கியதில் அந்த வீரர் அதே இடத்தில் எரிந்து பலியாகிய சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சாந்திபாப் கால்பந்து மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த தருணத்தில் 24 வயது கொண்ட சோஃப்வான் அவே என்ற வீரரை மின்னல் தாக்கியது. இந்த தாக்குதலின் பாதிப்பு , அவருக்கு மட்டுமல்லாமல் அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சக வீரர்கள் 12 பேருக்கும் காயத்தை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவத்தை காணொளியாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். மைதானத்தில் விளையாட்டு வீரரை மின்னல் நேரடியாக பேர் இரைச்சலோடு தாக்கும் காட்சி வெளியானது. மின்னல் தாக்குதலில் பல வீரர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தசோஃப்வான் அவேவை காப்பாற்றுவதற்கு சக வீரர்கள் ஓடிவந்தனர். அவருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்து மீட்க போராடினர்.
பின்னர் அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்டு காப்பாற்றுவதற்கு முயற்சிகளை செய்தனர். ஆனாலும் மின்னலின் மிகக் கடுமையான தாக்குதலினால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். தாய்லாந்து உள்ளூர் பகுதி காவல்துறை அதிகாரி துன் சிரிகுந்த் விளையாட்டு வீரர் உயிரிழந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.
இந்த சம்பவத்தில் பலியான சோஃப்வான் அவே, தாய்லாந்தின் சாம்கோல்ட்ஸ் என்ற உள்ளூர் அணிக்காக நீண்ட காலம் விளையாடி வந்தார். அதன் பின்னர் தாய்லாந்தின் மூன்றாம் தர நிலை கால்பந்து அணியான யாலா எஃப்சி அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சமீபகாலமாக தாய்லாந்தில் மின்னல் வெட்டினால் தாக்கப்பட்டு பலரும் உயிரிழந்து வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2020 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 283 பேர் மின்னல் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதத்தில் லாம்பாக் மாநிலத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் மின்னல் தாக்கியதில், கல்லூரி மாணவர் ஒருவர் அவரது உறவினருடன் பலியாகி உள்ளார். அதே மாதம் மீன் பிடிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் மழையின் காரணமாக மரத்திற்கு அருகில் ஒதுங்கிய போது, மின்னல் தாக்கியதில் பலியாகி உள்ளார்.தாய்லாந்தில் கால்பந்து மைதானத்தில் இந்த துயரச் சம்பவம் நடைபெற்ற அதே நாளில், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 14 விவசாய தொழிலாளர்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை அல்லது மேகமூட்டமான காலகட்டங்களில் , பொதுமக்கள் மின்னல் ஈர்க்கும் பகுதிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் மரம், இரும்பு கம்பி , செல்போன் டவர்கள் , மின்சாரக் கம்பங்கள் , வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.