
நம்பியோ தரவு தளம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைக் காட்டிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் டாப் 10 இடங்களில் சிறிய நாடுகள் தான் அங்கம் வகிக்கின்றன.
நம்பியோ தரவு தளம் (Numbeo Safety Index) கடந்த 2009 இல் முன்னாள் கூகுள் பணியாளர் மிலாடன் அடமோவிக் என்பவரால் செர்பியா நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தளம் வாழ்க்கை தர அளவீடுகள், நுகர்வோர் விலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் பாதுகாப்பான உலக நாடுகளின் பட்டியலைத் தயார் செய்ய ஆய்வு மேற்கொண்டது நம்பியோ. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணமே அமெரிக்காவை விட இந்தியா முன்னணியில் இருப்பது தான்.
உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள நாடு அன்டோரா. ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் பைரனீஸ் மலையில் தான் அன்டோரா நாடு அமைந்துள்ளது. இதுவொரு ஐரோப்பியா கண்டத்தைச் சேர்ந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது. ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறைந்த குற்ற விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் டாப் 5 இடத்திற்குள் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் குற்ற விகிதங்கள், பாதுகாப்பு அம்சங்கள், சமூக பணியில் இருக்கும் சவால்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தான் நம்பியோ தரவு தளம் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்கிறது. மேலும் பயனர்கள் அளிக்கும் தரவுகளையும் ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும்.
பொதுவாகவே பாதுகாப்பான நாடாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கருதப்படுகின்றன. ஏனெனில் இந்த இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியாக முன்னணியில் உள்ளன. ஆனால் தற்போதைய நம்பியோ ஆய்வுப் படி இந்தியாவை விடவும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பின்தங்கியுள்ளன.
நம்பியோ தளம் ஆய்வு மேற்கொண்ட 147 நாடுகளில் இந்தியா 55.7 புளிள்களைப் பெற்று 66வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 51.7 புள்ளிகளைப் பெற்று 87வது இடத்திலும், அமெரிக்கா 50.8 புள்ளிகளைப் பெற்று 89வது இடத்திலும் உள்ளன. தெற்காசிய நாடுகளில் சீனா மட்டும் அதிக புள்ளிகளைப் பெற்று டாப் 20 இடங்களுக்குள் வந்துள்ளது. இதன்படி சீனா 76 புள்ளிகளுடன் 15வது இடத்தையும், இலங்கை 59வது இடத்திலும், பாகிஸ்தான் 65வது இடத்திலும், வங்கதேசம் 126வது இடத்திலும் உள்ளன.
நம்பியோ வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆஃப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தான் டாப் 10 இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன.
இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெறும் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் வெனிசுலா இருக்கிறது. பாதுகாப்பு குறைவாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகள் டாப் 10 இடங்களில் உள்ளன.