தனிநபர் வருமான பட்டியல் வெளியீடு: தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

Annual Income
Income
Published on

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதில் தனிநபர்களின் வருமானமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்களின் வருமானம் உயராமல் இருந்தால் அது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும். இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. அப்போது பீகாரைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் நாட்டில் தனிநபர் வருமானம் குறித்த கேள்விகளை எழுப்பினர். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீட்டு அளவுகளின் படி 2024-25 ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் நிகர ஆண்டு வருமானம் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது. தனிநபர் நிகர ஆண்டு வருமானம் 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்ததாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப தற்போது உயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014-15 ஆம் ஆண்டில் தனிநபர் நிகர ஆண்டு வருமானம் ரூ.72,805 ஆக இருந்துள்ளது. இந்த வருமானம் தற்போது ரூ.41,905 உயர்ந்து, ரூ.1,14,710 ஆக உள்ளது. தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை தேசிய அளவிலான மதிப்பீட்டுக்கும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவிலான மதிப்பீட்டுக்கும் இடையில் வேறுபாடு இருக்கும். துறைசார் அமைப்பு, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், நிர்வாகம் மற்றும் தனிநபர்களின் தொழில் உள்ளிட்ட பல காரணிகளால் இந்த வேறுபாடு ஏற்படும்.

இதனையடுத்து மாநிலங்கள் வாரியாகவும் தனிநபர் நிகர ஆண்டு வருமான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் கர்நாடகம் தான் முதலிடத்தில் உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் கர்நாடகாவின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2,04,605 ஆக உள்ளது. தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் ஆண்டு வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
பிசிசிஐ-யின் ஆண்டு வருமானம் இத்தனை கோடியா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Annual Income

மூன்றாவது இடத்தில் ரூ.1,94,285 தனிநபர் வருமானத்துடன் ஹரியானாவும், நான்காவது இடத்தில் ரூ.1,87,912 தனிநபர் வருமானத்துடன் தெலங்கானாவும், ஐந்தாவது இடத்தில் ரூ.1,76,678 தனிநபர் வருமானத்துடன் மகாராஷ்டிராவும், ஆறாவது இடத்தில் ரூ.1,63,465 தனிநபர் வருமானத்துடன் இமாச்சலப் பிரதேசமும் உள்ளன. தனிநபர் வருமான பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பது, நம் மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துரைப்பதாக உள்ளன.

இதையும் படியுங்கள்:
சீரான மாத வருமானம் இல்லையா? இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்!
Annual Income

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com