

கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு கிராமுக்கு ரூ.10,000 வரை அல்லது சந்தை மதிப்பில் 75 சதவீதம் கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 22,793 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவுச் சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் 10,368 சங்கங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி, தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ. 10,000 வரை நகைக்கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நேரங்களில் உதவுவதற்காகவே வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. அதேபோல் மற்ற கடன்களை விடவும் தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிக மிக குறைவு ஆவணங்களே, அதிக நடைமுறைகளோ தேவையில்லை என்பதால் தங்க நகைக்கடனை வாங்கவே அதிகளவு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தனியார் வங்கிகளை விட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் மிகவும் குறைவாக கொடுக்கப்படுவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதனால் தங்கத்தின் விலை ஏறினாலும் கூட்டுறவு வங்கியில் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் சமீபகாலமாக பலரும் தனியார் வங்கிகளில் நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் தங்களது தேவைகளுக்காக நகைகளை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்ட கூட்டுறவு வங்கிகளில், தற்போது ஒரு கிராமுக்கு 7000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிகரித்து வரும் தங்கத்திற்கு ஈடாக தங்க நகைக்கடன் தொகையை ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களை கூட்டுறவு வங்கிகளை நோக்கி ஈர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.