

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி , முதல்வர் விஜயால் நியமிக்கப்பட்டுள்ளார். லயோலா மணி தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். தவெக சார்பில் நடைபெறும் பல்வேறு மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் லயோலா மணி விஜய்யை ஆதரித்து பேசியுள்ளார்.
அதுமட்டுமன்றி, கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் தொலைக்காட்சி விவாதங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அரசியல் விவாதங்களில் எதிர்க்கட்சிகளுக்கு சரியான முறையில் பதிலடி கொடுப்பதிலும், தவெக-வின் இரண்டாம் கட்ட முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராகவும் அவர் விளங்கி வருகிறார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவி, மாநில அரசினால் நேரடியாக வழங்கப்படுகிறது.இந்த பதவி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய கல்வியினை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. பாடப்புத்தக மேலாண்மை , கல்வி உபகரணங்கள் வழங்குதல் , ஆசிரியர் பயிற்சி புத்தகங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பிரிவுகளையும் நிர்வகிக்கிறது.
குறிப்பாக, இக்கழகம் பின்வரும் முக்கியப் பிரிவுகளை நிர்வகிக்கிறது:
பாடப்புத்தக மேலாண்மை: 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான புதிய பாடங்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் பாடத்திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மேலும், புத்தகங்களைச் சரியான முறையில் அச்சடித்து, பள்ளி தொடங்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்கிறது.
கல்வி உபகரணங்கள் வழங்குதல்: பள்ளி மாணவர்களுக்கு தேவையான விலையில்லாச் சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், மடிக்கணினிகள் (Laptops), மிதிவண்டிகள் (Bicycles) மற்றும் இதர கல்வி உபகரணங்களை கொள்முதல் செய்து வழங்கும் பணிகளை செயல்படுத்துகிறது.
ஆசிரியர் பயிற்சி மற்றும் மொழிபெயர்ப்பு: ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதுடன், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில், பிற மொழிகளில் உள்ள சிறந்த கல்விப் பாடங்களை தமிழில் மொழிபெயர்த்து புத்தகங்களாக வழங்கும் திட்டங்களையும் இது செயல்படுத்துகிறது.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர், தன்னுடைய பணிகளை துறை சார்ந்த ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் மற்றும் பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்களுடன் (Managing Directors) இணைந்து ஒருங்கிணைக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப கல்வித்துறையில் புதுமைகளை புகுத்துவதிலும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும் இப்பதவி முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதற்கு முன்னர், திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகப் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி பதவி வகித்தார். அவருக்கு முன்னதாக, அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி இந்தப் பொறுப்பில் இருந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இப்பதவி லயோலா மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இதற்கான நியமன ஆணையை இன்று லயோலா மணியிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கவுள்ள லயோலா மணி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் என்னென்ன புதிய திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறார் மற்றும் மாணவர்களின் பாடத்திட்ட மேம்பாட்டிற்காக அவர் எடுக்கப்போகும் புதிய முயற்சிகள் என்னென்ன என்பது இனிவரும் காலங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.