
சந்திர கிரகணம் இந்தாண்டு நாளை(செப்டம்பர் 7-ம்தேதி) ஞாயிற்று கிழமை இரவு 9.52 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.52 மணிக்கு முடிவடைகிறது. இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு 7-ம்தேதி இரவு 10:28 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்கி, 11:01 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 12:23 மணிக்கு முழு கிரகணம் முடிந்து, 1:56 மணிக்கு பகுதி கிரகணமும் முடிவடையும்.
இந்த அற்புதமான வானியல் நிகழ்வின் போது, பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மறைப்பதால், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ‘இரத்த நிலவு’ (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. வானம் தெளிவாக இருந்தால், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாக காண முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இதற்கு தொலைநோக்கி அல்லது பைனாகுலர் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் ஏற்படும் போது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடக்கூடாது என்று இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் வீட்டில் ஜன்னல் கதவுகளை மூடிவிட வேண்டும். சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களது இரவு உணவை அருந்திவிட வேண்டும். பவுர்ணமி அன்றே கிரகணம் ஏற்படுவதால் அன்றிரவு ஆலய தரிசனம் செய்யக்கூடாது. கிரகணம் முடிந்து அடுத்த நாள் காலையில் வீட்டை துடைக்க வேண்டும். வீட்டில் அருகில் உள்ள கோவிலுக்குசென்று தீர்த்தம் வாங்கி வந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் சாமி படத்திற்கு விளக்கேற்றி பூஜை செய்த பின்னரே சமையலறைக்கு சென்று புதிதாக சமைத்து அனைவரும் சாப்பிட வேண்டும். இவ்வாறு கிரகண நேரத்தில் செய்ய வேண்டும் என நமது இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற கூறப்படுகிறது. அறிவியலின் படி, நேரடியாக சூரியன் சந்திரன் ஒளியை விட கிரகணத்தின் ஒளி நம் மீது படும் பொழுது அது வேறு விதமான, எதிர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும்.
எனவே, இது கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தை உண்டாக்கும் என்றும் இதனால் முன்கூட்டியே குழந்தை பிறக்கக்கூடிய ஆபத்தும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு சிலர் இது எல்லாம் கட்டுக்கதை என்று கூறினாலும் தற்போது வரை கிரகணம் ஏற்படும் போது கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதை தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் கோவில் நடை மூடப்படும் நேரம்....
அதுமட்டுமின்றி சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல கோவில்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்.,7-ம்தேதி மதியம் 1 மணிக்கு நடை சாத்தி மறுநாள் (8-ம்தேதி)காலை வழக்கம்போல் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் கோவில் நடை சாற்றப்பட்டு மறுநாள்(8-ம்தேதி) கிரகண பூஜைகள் முடிவுற்ற பின்பு அதிகாலை 5.30 மணியளவில் நடைதிறக்கப்பட்டு வழக்கம் போல பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் நடை 7-ம்தேதி மதியம் 2 மணிக்கு அடைக்கப்பட்டு மறுநாள் (8-ம்தேதி) அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் செப்டம்பர் 7-ம்தேதி பிற்பகல் 3:30 மணி முதல் அடுத்த நாள் (8-ம்தேதி)அதிகாலை 3 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் 7-ந்தேதி பிற்பகல் 2.30 மணியளவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் கிரகண பூஜைகள் முடிவுற்ற பிறகு மறுநாள் 8-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலையில் 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். மறுநாள் செப்டம்பர் 8-ம் தேதி காலை முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் ஏற்படும் போது இந்தியாவில் பல கோவில் மூடப்பட்டாலும் சில கோவில்களில் நடை திறந்திருக்கும். அதில் ஒன்றுதான் காளஹஸ்தி கோவில். இந்த கோவில் கிரணத்தன்று மூடப்படுவதில்லை. அதேநேரம் கிரகண நேரத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.