திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏன்? உயர்நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
chennai high court
Chennai High court image credit: Live law
Updated on

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் ராஜினாமா செய்த இடங்கள் என மொத்தமாக 7 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக, அதிமுகவை ஓரம்கட்டி தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து கடந்த மே 10-ம்தேதி தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

அதன்பின்னர் அதிமுகவை சேர்ந்த முன்னனி தலைவர்கள் தவெகவிற்கு ஆதரவளித்த நிலையில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதன் பின்னணியில் குதிரை பேரம் இருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்குமாறு வழக்குகள் தொடர்ந்துள்ளன.

இந்நிலையில் தான் இடைத்தேர்தல் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதாவது திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு வரும் ஜூலை 31-ம்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், பெரம்பூரை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரப் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும்வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம், 1967 முதல் 2018-ம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

மனுதாரரின் வாதத்தில் உள்ள சட்டப்பூர்வ நியாயங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிப்பது சட்டச் சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் கருதியது.

மேலும் தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்சினை எழும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் - ஜனநாயகத்திற்கு பின்னடைவு : ஜி.கே. வாசன் வருத்தம்!
chennai high court

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் ஜூலை 31-ம்தேதி வரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அதேசமயம், எஞ்சிய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் தற்போதைக்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. ஏனெனில், இந்த இரு தொகுதிகளுக்கு எதிராக எந்தவொரு தேர்தல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஜூன் 18-ல் இடைத்தேர்தல்.! டெல்லி நாடாளுமன்றத்தை குறிவைக்கும் தவெக..?
chennai high court

உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு இடைத்தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றத்தையும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என காத்திருந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com