

தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பாமகவின் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஏற்கனவே பாஜக மற்றும் ஆமமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள அதிமுகவுக்கு பாமகவின் ஆதரவும் அவசியமென கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. இடைத்தேர்தலிலும் அதே நிலைப்பாட்டை பாமக எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், இபிஎஸ் மீது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 12-ம் தேதி அன்புமணி ராமதாஸ் சென்னை வரவுள்ளார். அவர் சென்னைக்கு வந்த பிறகு தான் அதிமுக-வுக்கு ஆதரவு அளிப்பாரா அல்லது இல்லையா என்பது தெரிய வரும்.
இடைத்தேர்தலில் தங்களது பலத்தைக் கூட்ட அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில், தேமுதிகவின் ஆதரவை நாடி திமுக வேட்பாளர்கள் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டனர்.
தேமுதிக அலுவலகத்திற்கு திமுக மூத்த தலைவர்கள், வேட்பாளர்கள் பரந்தாமன் மற்றும் சௌமியா ஆகியோர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசிவுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐயூஎம்எல், விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது தவெக கூட்டணியில் இணைந்திருப்பது திமுகவிற்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.
இந்தியன் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை எனக் கூறி வரும் நிலையில், இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்பது இனி தான் தெரிய வரும்.
திராவிட கட்சிகள் இடைத்தேர்தலில் வெல்லும் முனைப்போடு மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுக மாஜி எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்கியுள்து. இதனால் இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை திமுக மற்றும் தவெக மட்டும் தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகள் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.