

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான தமிழக வெற்றிக் கழகம், சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களை வென்று தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளது.
108 இடங்களை வென்ற தவெக-க்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்திருப்பது தவெக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவெகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக விசில் சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளது
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 29A-ன் கீழ் ஒரு புதிய கட்சியானது இந்திய தேர்தல் ஆணையத்தில் தன்னை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
தகுதிகள்:
ஒரு கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற வேண்டுமெனில், அந்தக் கட்சி குறைந்தது ஒரு சட்டப்பேரவை அல்லது ஒரு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். மேலும் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகள் மற்றும் 2 எம்எல்ஏ இடங்கள் அல்லது மொத்த இடங்களில் 3% இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
பொது சின்னம்:
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே நிரந்தரச் சின்னம் அந்த மாநிலத்தில் ஒதுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட மற்றும் அதே சமயம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்குத் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் 'பொதுச் சின்னங்கள்' பட்டியலிலிருந்தே சின்னம் கோர முடியும். இதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டது.
நிரந்தர சின்னம் விசில்:
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்ததன் மூலம் விசில் சின்னம் தவெக-வின் நிறைந்த சின்னமாக உறுதி செய்யப்பட்டுள்ளது