

ஜூன் 1, முதல், இந்தியா முழுவதும் பல முக்கிய நிதி சார்ந்த மற்றும் அன்றாட வாழ்க்கை விதிகள் மாறவுள்ளன. LPG விலைகள், பெட்ரோல் டீசல் விலை, வங்கி விதிகள், ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் மற்றும் பான் கார்டு விதிமுறைகள் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. எனவே, இந்த விதிகளை முன்கூட்டியே அறிந்துகொள்வது, கூடுதல் செலவுகள் அல்லது சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
குறிப்பாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், இந்த மாற்றங்களில் பல உங்கள் பொருளாதார நிலையைப் பாதிக்கக்கூடியவையாக அமையும். ஒவ்வொரு மாதத் தொடக்கத்தைப் போலவே, இந்த மாற்றங்களும் வீட்டுச் செலவுகள், வரிகள் மற்றும் பயணச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
இந்த மாற்றங்கள் நிர்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், அவை குடும்பங்களுக்கான செலவுகளை அதிகரிக்கக்கூடும்; இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள மக்களின் அன்றாடச் செலவுகள், வங்கிச் செயல்பாடுகள் மற்றும் பயணத் திட்டமிடல் முடிவுகள் ஆகியவை பாதிக்கப்படலாம்.
LPG சிலிண்டர் விலைகள் மீண்டும் மாறலாம்:
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவி வரும் நெருக்கடியின் காரணமாக, LPG விநியோகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,237.50-க்கும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.928க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விலைகளை மறுபரிசீலனை செய்வதால், இப்போது LPG-யின் புதிய விலை ஜூன் 1 முதலே அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
பான் கார்டு ரூல்ஸ்:
புதிய வருமான வரி விதிகள் 2026-இன் படி, வருமான வரித்துறை பான் கார்டு விதிகளில் சில தளர்வுகளையும் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது.
முன்பு ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்வதற்கு பான் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், சொத்து வாங்குவதற்கும் விற்பதற்கும் பான் பயன்படுத்துவதற்கான வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 45 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துப் பரிவர்த்தனைகள், பரிசுப் பத்திரம் மற்றும் கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் (JDA) ஆகியவற்றிற்கு பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் எடுப்பதற்கும் பான் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக, பழைய படிவம் 60-க்கு பதிலாக புதிய படிவம் 97 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களிடம் பான் இல்லையென்றால் இதைப் பயன்படுத்த வேண்டும்.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி
பல பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களைத் திருத்தி அமைக்கத் திட்டமிட்டுள்ளன. மேலும், சில சிறப்பு FD திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பல புதிய திட்டங்களும் அறிவிக்கப்படலாம். எனவே வாடிக்கையாளர்கள் அதற்கான அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும்.
UPI பரிவர்த்தனை:
டிஜிட்டல் மோசடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு பெரிய, வெளிப்படையான பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துகிறது. புதிய விதிகளின்படி, கியூஆர் குறியீடு, மொபைல் எண் அல்லது போலிப் பெயருக்குப் பதிலாக உண்மையான பயனாளியின் சரிபார்க்கப்பட்ட பெயர் மட்டுமே காட்டப்படும். இதன் மூலம் நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்புவது முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதுடன் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் UPI மோசடிகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில் பயணம்:
ஜூன் மாதத்தில் இந்திய ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட உள்ளதால் சுமார் 77 ரெயில்கள் வரை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சில ரெயில் வழித்தடங்களில் பிரச்சனை இருப்பதால் அந்த வழித்தடங்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழகத்திலிருந்து இந்த மாநிலங்களுக்கு ஜூன் மாதத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் ரெயில் கிளம்பும் லைவ் ஸ்டேட்டஸ்-ஐ சரி பார்த்துக் கொள்வது நல்லது.
சோலார் பேனல்களுக்கான புதிய விதிகள்:
இன்றைய காலகட்டத்தில் அதிகரிக்கும் மின்சார பில்லை கருத்தில் கொண்டு பல வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசு புதிய "Approved List of Models and Manufacturers" என்ற விதியை ஜூன் 1 முதல் அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
இனிமேல் உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்முறை சூரியசக்தி திட்டங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சோலார் மாடல்களை பயன்படுத்தினால் மட்டும்தான் அதற்கு மானியம் வழங்கப்படும். தரம் குறைந்த அல்லது அங்கீகரிக்கப்படாத சோலார் பேனல்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.
இந்த விதி குறிப்பாக அரசாங்கத் திட்டங்கள், மானியங்கள், நெட் மீட்டரிங் உள்ளிட்ட திட்டங்களுக்குப் பொருந்தும். இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஒரு உத்வேகம் ஆகும். மேலும் இந்தக் கொள்கை முடிவு, சோலார் பேனல்களின் விலையை தற்காலிகமாக உயர்த்தக்கூடும் என்றாலும், உள்நாட்டு பசுமை உற்பத்தியின் தரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏடிஎம் தொடர்பான புதிகள்:
கடந்த மாதம், பல வங்கிகள் ஏடிஎம் மற்றும் வங்கி விதிகளில் மாற்றங்களைச் செய்தன. சில வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. ஜூன் 1 முதல் சில வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள், இலவசப் பரிவர்த்தனை வரம்புகள் மற்றும் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றங்களைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே வங்கிகள் ஏடிஎம் சேவை கட்டணங்களை மாற்ற வாய்ப்புள்ளது.
ரேஷன் கார்டு
டெல்லியில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் டெல்லி அரசு ரேஷன் கார்டு விதிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.1.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விதிமுறை ஜூன் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தவிர, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் ஆதார் அட்டை, பெட்ரோல்-டீசல் விலைகள் மற்றும் ரெப்போ விகிதம் தொடர்பான வேறு சில மாற்றங்களும் ஜூன் மாதத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.