

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு தொடர்பாக கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு எங்களுடைய உரிமை என முழங்கி வருகின்றனர். இதற்கு திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக மனுசங்கர் அய்யர் பேசி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த மூன்று முறையும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமராக்கவும், இந்தியா கூட்டணியை தேசிய அளவில் பலப்படுத்தவும் ஒருவர் தேவை. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சரியான நபராக இருப்பார் என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வெறும் முழக்கங்களை மட்டும் எழுப்புவது மட்டுமின்றி, கூட்டாட்சியை வலுப்படுத்தும் வேலையை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த ஒவ்வொன்றும், கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையானவை தான்.
ராகுல் காந்தியை பிரதமராக்க இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கு சிறந்த தலைவர் ஒருவர் தேவை. இந்த காரணங்களுக்காகத் தான், நான் மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணிக்கு தலைவராக்க வேண்டும் என்கிறேன்.
ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு மு.க.ஸ்டாலின் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு காமராஜருக்கு கிடைத்த போது, அவர் அதனை மறுத்து விட்டார். தற்போது காமராஜரின் இடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” என மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளுக்கிடையில், மணிசங்கர் அய்யர் கூறிய இந்த கருத்து, இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீடு முடிவாகும் போது தான், இதற்கான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.