

திரிணாமுல் காங்கிரஸ் (TMC)தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக அரூப் ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக நியமித்திருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. குழு அறிவித்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக இருந்துவந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியைச் சந்தித்தார். பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்து சுவேந்து அதிகாரி முதலமைச்சரானார்.
இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு சரிவைச் சந்தித்துவருகிறது திரிணாமுல் காங்கிரஸ் என்றே சொல்லும் அளவிற்கான நிகழ்வுகள் அக்கட்சியில் நடந்துவருகிறது.
முதலில் சட்டமன்றத்தில் 80 உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரஸில் இருந்து 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியாக உருவாகி, தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைமையான ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
தேர்தலில் தோல்வி அடைந்து சட்டமன்றத்திற்குள்ளே நுழையமுடியாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் சரிவாக அமைந்தது இந்த நிகழ்வு.
எதிர்க்கட்சி தலைவர் ரீதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழு, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களில் கணிசமான பிரிவினரின் ஆதரவை பெற்றிருப்பதாக கூறியது.
கொல்கத்தாவின் முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உட்பட, மம்தா பானர்ஜியின் நெருங்கிய கூட்டாளிகள் பலர் கிளர்ச்சி முகாமில் இணைந்துள்ளனர் என்பதும் அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பா.ஜ.க. அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த அதே நாளான (நேற்று)திங்கட்கிழமையன்று இந்த நிகழ்வுகள் அரங்கேறின. சிறிது நேரத்திற்கு பிறகு, அதிருப்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கூட்டத்தை கூட்டினர்.
அதிருப்தி குழுவின் கூற்றுப்படி, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட சுமார் 500 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில், கொல்கத்தா, பஹரம்பூர், உத்தர்பாரா, ஸ்ரீராம்பூர் மற்றும் டம்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 40 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில், 4 துணைத் தலைவர்கள் மற்றும் 4 பொதுச்செயலாளர்கள் உட்பட 30 உறுப்பினர்களை கொண்ட தேசிய செயற்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்து, அதனை 'உண்மையான' திரிணாமூல் காங்கிரஸ் என்று அவர்கள் அமைப்பின் முறையான கட்டமைப்பு மையமாக நிலைநிறுத்தினர்.
1998-இல் மம்தா பானர்ஜியால் நிறுவப்பட்ட கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் முயற்சியே இந்தக்கிளர்ச்சியின் மையமாக உள்ளது. கிளர்ச்சி குழுவினர் குரல் வாக்கெடுப்பு மூலம் எம்.எல்.ஏ. அருப் ராயை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதே நேரத்தில், மம்தாவின் ஆதரவாளர்களோ அவரே தங்களின் கட்சித் தலைவர் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
புதிய கட்டமைப்பில் மூத்த தலைவர்களுக்கு விரைவாக பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஃபிர்ஹாத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ரத்தின் கோஷ் மற்றும் சபினா யாஸ்மின் ஆகியோர் துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
ரிதாப்ரதா பானர்ஜி, ஜாவேத் கான் மற்றும் சந்திபன் சாஹா ஆகியோர் பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், அக்ருஸ்ஸமான் அன்சாரி பொருளாளராக நியமிக்கப்பட்டார்.