
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று பல் துலக்குவதில் ஆரம்பித்து இரவு படுக்க போகும் வரை மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்குவதே இல்லை.
அந்த வகையில் அண்மைக்காலமாக, சிறியோா் முதல் பெரியோா் வரை, ‘ரீல்ஸ்’ மோகத்திற்கு ஆளாகி, அடிமையாகி வருகிறாா்கள். தாங்கள் எடுக்கும் ரீல்ஸ் இணைத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இவர்கள் பல ஆபத்தான செயல்களை செய்வதுடம் மட்டுமில்லாமல், சில சமயங்களில் மற்றவர்களையும் ஆபத்தில் சிக்கி வைத்து விடுகின்றனர். அதைவிடவும், ரீல்ஸை’, படமாக்கியபடியே லைவ்வாக பதிவிடுகிறவா்கள், சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனக்கும் பிறா்க்கும் கேடு விளைவிக்கிறாா்கள். இவர்கள் செய்யும் ரீல்ஸ் சில சமயங்களில் ஆபத்திலும் முடிந்து விடுகிறது. எது நடந்தாலும் சமூக வலைதள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் நிலைக்கு சென்றுள்ளனர்.
இந்த ரீல்ஸ் அடிமைகள், மாடியில் இருந்து குதிப்பது, ஆபத்தான மலைகளில் தான்தோன்றித்தனமாக ஏறுவது, வேகமாக வரும் ரெயில், பேருந்தில் தொங்கியபடி வருவதை ரீல்ஸ் எடுப்பது என்று ஆண், பெண், சிறியவா், இளைஞா் என வயது வித்தியாசமின்றி ரீல்ஸ்க்காக உயிரிழந்த, விபத்துக்குள்ளாகியதாக வருகிற செய்திகள் ஊடகங்களில் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது. இதனால் பல சமூகவலைதள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தால் தங்களது வாழ்க்கையையே தொலைக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ரீல்ஸ் மோகத்தால் ஒரு இளைஞன் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான பாலமான கருதப்படுவது அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள டாக்டர் பூபன் ஹசாரிகா சேது (தோலா-சாடியா பாலம்) பாலம். இந்த பாலத்தில் இளைஞர் ஒருவர் செய்த ஆபத்தான சாகசம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த இளைஞர் ஆபத்தான அந்த பாலத்தின் தண்டவாளத்தில் தொங்குவதையும், பின்னர் புஷ்-அப்களைச் செய்வதையும் காணலாம். அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் இந்த செயலை தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்கிறார்கள். இளைஞரின் இந்த செயல் உயிருக்கு ஆபத்தானது மட்டுமல்லாமல், பொது பாதுகாப்பின் அடிப்படையில் மிகவும் கவலைக்குரிய விஷயமாகவும் மாறியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் உள்ளூர் குடிமக்களும் சமூக அமைப்புகளும் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரீல்ஸ் மோகத்தால் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டின்சுகியா மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாலத்தில் சாகசம் செய்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்க முடியும் என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். இருப்பினும், இதுவரை உள்ளூர் நிர்வாகமோ அல்லது காவல்துறையோ இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அசாமில் உள்ள லோஹித் நதியின் மீது அமைந்துள்ள 9.15 கி.மீ நீளமுள்ள தோலா-சாடியா பாலம் 2017-ல் திறக்கப்பட்டது. ரூ.2,056 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பாலம், பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்பை விட 3.55 கி.மீ நீளமானது.
தொழில்நுட்பம் பல நல்ல வழிகளில் உதவினாலும் பயன்படுத்துவோர் அதனை ஆபத்தான கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே பெரிய விபரீதங்கள் நடப்பதற்கு வழிவகை செய்கிறது.