

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சியினர்’ போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சில மாணவர் அமைப்புகளும் கலந்து கொண்டன. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை 23) சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி ‘சலோ சம்சத்’ என்ற பேரணியை மாணவர்கள் முன்னெடுத்தனர். மேலும் மத்திய அமைச்சய் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். டெல்லி போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகளும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதோடு மக்களவையிலும் நீட் எதிர்ப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவ்வப்போது மக்களவை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது
டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கின்றன. நேற்று (ஜூலை 22) எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி மாநிலக் கல்லூரி மற்றும் புதுக் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் வரலாற்றில் இடம் பெறும் அளவிற்கு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்நிலையில் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதராவாக பேசி வரும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் ரத்து ஒன்றே நிரந்தரத் தீர்வு எனத் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு நாட்டில் எங்கேனும் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் மாணவர்களுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மெரினாவில் அதிகளவிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் தவிர்த்து, வேறு யாரேனும் செல்கிறார்களா எனத் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை மெரினாவில் போராட்டம் நடைபெறுவதற்கான சூழல் அதிகமானால் 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், போராட்டக்காரர்கள் மெரினாவில் கூடுவதைத் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் முடியும் வரை, தமிழ்நாட்டிலும் பரபரப்பாகவே இருக்கும். இதனால் மெரினாவில் பொடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.