

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படம் ‘ஜன நாயகன்’ பல தடைகளை தாண்டி இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்களுடன் அமைச்சர்களும் திரையரங்குகளுக்கு சென்றனர். மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் விடுப்பு எடுத்து படம் பார்த்தது சர்ச்சை ஆனது. அமைச்சர் முகமது பர்வேஸ், இனி தளபதி படத்தை பார்க்க முடியாது என உருக்கமாக அழுத காட்சி இணையத்தில் வைரலாகிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று ரிலீஸாகி உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு தடைகளத் தாண்டி ஜனநாயகன் ரிலீஸானது. முதல்வர் விஜய்யின் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். இதன்படி மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் பர்வேஸ் மற்றும் அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தனர்.
அமைச்சர் விக்னேஷ், தான் எப்போதும் படம் பார்க்கும் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தார். அமைச்சர் வருகையால் திரையரங்கிற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் முகமது பர்வேஸ் தளபதியின் கடைசி திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
இன்று தமிழகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படத்தை ஒரு பெரிய திருவிழா போல், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தைக் காண தான் விடுப்பு எடுத்து விட்டதாக அமைச்சர் விக்னேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார். ஒரு அமைச்சரே இப்படி செய்யலாம் என பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வந்த நிலையிலும், இன்று அவர் ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டுகளித்தார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஜனநாயகன் திரைப்படத்தை திரையில் கண்டு, இனி எப்போது தளபதி படத்தை பார்ப்பேன். இனி அது முடியாதல்லவா எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அமைச்சர் அழுத காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய்யை இனி திரையில் காண முடியாது என்ற ஏக்கத்தில் அவர் அழுதது, விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரான முகமது பர்வேஸ், புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இருவரும் இணைந்து, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் படத்தை கண்டுகளித்தனர்.
இதற்கு முன்னதாக ஜனநாயகன் படத்தை பார்ப்பதற்கு முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதற்கு முதல்வர் அனுமதி அளிக்கவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் பலரும் இன்று முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்து ரசித்தனர்.
ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாவதற்கு முன்பு, முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் ஜூலை இறுதியில் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஜனநாயகனின் ரிலீஸ் தேதி உறுதியானதும், சிக்மா படம் ஆகஸடில் வெளியாகும் என டக்குழு அறிவித்தது. இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவைற்பைப் பெற்று வருகிறது.