
இந்திய சமூக அமைப்பில், திருமணத்திற்கு மிக முக்கியமான பங்கு உள்ளது. திருமணம் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வாழ்க்கையில் அடைய வேண்டிய ஒரு முக்கியமான இலக்காகவே கருதப்படுகிறது, அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு இது தொடர்பான அழுத்தம் இன்னும் அதிகம் என்றே சொல்லலாம்.
இந்தியாவில் பெண்களுக்கு 21 வயது நிரம்பி விட்டாலே எப்போ கல்யாணம் என அனைவரும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் இந்திய கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அதுவும் இந்தியாவில் பெண்ணாக பிறந்துவிட்டால் அந்த வயதிற்குள் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாய நிலை இருந்தது.
அதுவும் அந்த காலத்தில் 12, 13 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் படித்து விட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் ஒரு குறிப்பிட் வயதிற்கு பிறகு கல்யாணம் செய்து கொண்டு குடும்பம், வேலை, பிள்ளை குட்டிகள் என சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தத் தொடங்கி விடுகின்றனர்.
ஒரு சில பெண்கள் மட்டும் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். அப்படி உள்ள பெண்களிடம் 'எப்போது திருமணம்?', 'இப்படியே இருந்து என்ன சாதிக்கப் போகிறாய்?', 'உனக்கு ஏதும் குறை உள்ளதா?' போன்ற அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை இந்த சமூதாயம் எழுப்ப ஆரம்பித்து விடும். ஆனால் ஆண்கள் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் எதுவும் கேட்க மாட்டார்கள். பெண்களை தான் இந்த சமூதாயம் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கும்.
இந்தியாவில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் அதிகளவு பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் வாழத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் அண்டை நாடான சீனாவில் ஏற்கனவே குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்து வரும் நிலையில் பெரும்பாலான இளம் பெண்கள் திருமணம் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
1988ம் ஆண்டிலிருந்து தற்போது வரை சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 68% வரை குறைந்திருக்கிறது. இந்த நிலையில் சீன அரசு தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் அரசாங்கம் திருமணம் ஆன தம்பதிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்திருந்தாலும், சீனாவை சேர்ந்த பெண்கள் பலரும் திருமணம் செய்வதை தவிர்த்து திருமணத்திற்கு தாங்கள் தயாராக இல்லை என்றே கூறிவருகின்றனர்.
திருமணம் தங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாகவும் தங்கள் மீது ஒரு கடமையாக திணிக்கப்படுவதாகவும் கூறி வரும் சீன பெண்கள், திருமணத்தை தவிர்த்து தற்போது தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், திருமணம் மற்றும் பாரம்பரிய குடும்ப வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, சீனப் பெண்கள் தங்கள் மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில் சீனாவில் வசதி படைத்த மற்றும் நடுத்தர குடும்பப் பெண்கள் பாரம்பரிய திருமண உறவுகளைத் தவிர்த்து, 'கென்ஸ்' (Kens) எனப்படும் கணவரை போல், ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளும் ஒரு புதிய கலாசாரம் வேகமாக பெருகிவருகிறது.
'கென்ஸ்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். அதாவது கணவரை போன்றவர்.. ஆனால் கணவர் இல்லை. அந்த வகையில், 'கென்ஸ்' பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் பெண்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்டவர்களே கென்ஸ்களாக தேர்ந்தெடுக்க சீனப்பெண்கள் விரும்புகின்றனர்.
இந்த 'கென்ஸ்' என்பவர்கள், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வார். அதாவது, சமையல் செய்வது, துணி துவைப்பது, வாகனம் ஓட்டுவது, குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது,
வீட்டை சுத்தம் செய்தல், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது, பணிக்கு அமர்த்தும் பெண்கள் விரும்பினால் ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும், ஒரு துணை செய்யும் பல விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் சாதாரண கணவரை போல் எந்த தொந்தரவுகளையும் இவர்கள் செய்வதில்லை என்பதால் பெண்கள் இவர்களை அதிகம் விரும்புகின்றனர்.
இவர்கள் பெண்களிடம் சாதாரண கணவரை போல் ஒருபோதும் வாதிடவோ, சண்டையிடவோ மாட்டார்கள் என்பதால் பெண்கள் இவர்களை பணிக்கு அமர்த்த அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், இவர்கள் சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் தொழில்முறை உதவியாளர்களாக இருக்கிறார்கள்.
பல வசதியான சீனப் பெண்கள் சுதந்திரமாகவும், தனிமையில் வாழ விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல், கணவருக்கு மாற்றாக 'கென்' எனப்படும் இளம், அழகான ஆண் உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இந்த ‘கென்ஸ்’ எனப்படும் ஆண்கள், வாடிக்கையாளர்களின் தேவைகளை எதை வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றத் தயாராக இருப்பார்கள் என்பதால் தற்போது சீனாவில் ‘கென்ஸ்’ கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் மக்கள் தொகை வேகமாக சரிவடைந்து வரும் நிலையில் வேகமாக பரவி வரும் இந்த 'கென்ஸ்' புதிய கலாச்சாரம் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.