

உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து வானியல் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய கனிமம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் நிலவுக்கு செமற்கைகோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா சார்பில் ‘மங்கள்யான் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக கார்னெட் என்று அறிய வகை கனிமம் மற்றும் ஒரு புதுவகையான பாறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்னெட் கனிமம் பூமியில் அரிய வகை கனிமமாக பார்க்கப்படும் சூழலில், செவ்வாயில் இந்தக் கனிமம் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் இருந்து ‘NWA 8171’ என்ற சிறிய விண்கல் பூமியில் விழுந்தது. இந்த விண்கல்லை ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகம் மற்றும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த விண்கல்லில் மிகச் சிறிய அளவில் கார்னெட் கனிமம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்தக் கனிமம் 0.8x0.5 மி.மீ என்ற அளவில் தான் இருந்துள்ளது. அதாவது ஒரு சிறிய கடுகு விதையைக் காட்டிலும் விண்கல்லில் இருந்த கார்னெட்டின் அளவு குறைவாகும். செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் கார்னெட் கனிமம் கிடைப்பது இதுவே முதல் முறை.
கார்னெட் கனிமங்கள் உருவாவதற்கு அதிக அழுத்தமும் வெப்பமும் தேவை. தற்போது கிடைத்திருக்கும் கார்னெட் கனிமத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தின் பண்டைய வரலாறு, விண்கல் தாக்கங்கள் மற்றும் எரிமலை செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பல பில்லியன் ஆண்டுகளாக செவ்வாய் கிரகமானது, எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைக் கண்டறிய கார்னெட் முக்கிய ஆதாரமாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த விண்கல்லில் கார்னெட் கனிமம் இருந்தாலும், இந்தக் கனிமம் செவ்வாய் கிரகத்தில் தான் உருவானதா அல்லது விண்கல் மூலமாக செவ்வாய் கிரகத்திற்கு வந்து சேர்ந்ததா என்ற குழப்பம் விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனைத் தெரிந்து கொள்ள கார்னெட் கனிமத்தின் ஆக்சிஜன் ஐசோடோப்புகளை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
கார்னெட் என்பது புவியின் உட்புறத்தில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தின் கீழ் உருவாகும் சிலிவனகேட் வகை கனிமமாகும். இந்தக் கனிமம் செவ்வாய் கிரகத்தில் தான் உருவானது என்பது ஆராய்ச்சியில் நிரூபணமானால், அது வானியல் ஆராய்ச்சிகளில் புதிய மைல்கல்லாக அமையும்.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த கார்னெட் கனிமம், ஆராய்ச்சிக்கான புதிய பாதையைக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பு வரை செவ்வாயில் கிடைத்த கனிமங்கள் எரிமலை குழம்புகள் வகையை சார்ந்தவை. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் கார்னெட் கனிமம் ஒரு காலத்தில் செவ்வாயில் அதிகப்படியான நீர் இருந்திருக்காலாம் என்பதை உணர்த்துகிறது.
மேலும் இந்த கார்னெட் கனிமத்தின் மூலம் செவ்வாயின் புவியியல் அமைப்புகள், பூமியின் புவியியல் அமைப்புகளோடு ஒத்துப் போகவும் வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்படுகிறது