
கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றத்தால் பல நாடுகள் அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் இந்தியாவில் கர்நாடகா, அசாம், புனே, மகாராஷ்ரா போன்ற மாநிலங்கள் அதிகளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளின் 25 சதவீத பகுதி இந்த கொலம்பியாவில் அமைந்துள்ளது. மறுபுறம் அழகிய கடற்கரைகள், மலை பிரதேசங்கள் என எண்ணிலடங்காத இயற்கை அழகை கொலம்பியா தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா வந்து மலையேற்றம், படகு சவாரி, பாரா கிளைடிங், அலை சறுக்கு, வனவிலங்கு பார்வை சவாரி என அனுபவிப்பார்கள்.
கொலம்பியாவின் பிரபல மலை பிரதேசமாக அன்டியோகிவாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மலைசிகரமான பெல்லோவில் இடி, மின்னலுடன் அதிகனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த டஜன் கணக்கான வீடுகள் உள்ளிட்டவை மிகப்பெரிய அளவில் அடித்து செல்லப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுக்கள், சமூக தன்னார்வலர்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்த மழையின் காரணமாக லா நெக்ரா ஓடை நிரம்பி வழிந்த பிறகு அதிகாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அதிகாலையில் தங்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஆன்டியோகுவியா ஆளுநர் ஆண்ட்ரேஸ் ஜூலியன் ரென்டன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் நிலச்சரிவில் பல வீடுகள் பூமியில் புதைந்துள்ளன. மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. மேலும் மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
மழை நீரின் சக்தி அந்த இடத்தின் பல பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது, தெருக்கள் ஆறுகளாக மாறி, அவற்றின் பாதையில் உள்ள அனைத்தையும் அடித்துச் சென்றுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட படங்களில் வீடுகள் டன் கணக்கில் சேறு மற்றும் குப்பைகளால் முழுமையாக மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
“நாங்கள் இரைச்சல் சத்தத்தைக் கேட்டோம், எல்லோரும் எழுந்து வெளியே ஓடினார்கள். நாங்கள் வெளியே வந்தபோது, எல்லோரும் ‘நிலச்சரிவு, நிலச்சரிவு!’ என்று கத்திக் கொண்டிருந்தார்கள்” என்று யூலியத் அரங்கோ என்ற குடியிருப்பாளர் கூறினார்.
மேற்கு கொலம்பிய ஆண்டிஸில் அமைந்துள்ள ஆன்டியோகுயா, மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவுகளால் பாதிக்கப்படுகிறது. கடந்த மாதம் மற்றொரு மெடலின் புறநகர்ப் பகுதியான சபனேட்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஐந்து பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் கொலம்பியாவில் பாரம்பரியமாக மழை பெய்யும் மாதமாக இல்லாவிட்டாலும், திடீரென பெய்த பலத்த மழையின் இந்த விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கொலம்பியாவில் இவ்வாறு நடப்பது புதிதல்ல. ஏனெனில் இதற்கு முன் அதாவது 2017-ம் ஆண்டில், மூன்று ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் மொகோவாவில் (புடுமாயோ) ஏற்பட்ட பனிச்சரிவில் 336 பேர் இறந்தனர் மற்றும் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல் கடந்த ஆண்டு, குயிப்டோ மற்றும் மெடலின் இடையேயான சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைத்து, குறைந்தது 34 பேரின் உயிரைப் பறித்தது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற திட்டமிடல் இல்லாததும், ஒழுங்கான முறையில் வீடு கட்டாததும், வீடு கட்ட பொருத்தமற்ற நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதும் இந்த துயர சம்பவத்திற்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.