தொடர் கனமழைக் காரணமாக இந்தோனேசியாவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சமீபக்காலமாக உலகெங்கிலும் மிக அதிகனமழை, அதிக வெயில், அதிக பனி என மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் தொடர்ந்து இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இதில் ஏராளமான மக்கள் பலியாகியும் வருகின்றனர்.
இப்படித்தான் இந்தியாவில் கேரளாவில் சென்ற ஆண்டு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை காவு வாங்கியது. பல நாட்கள் மீட்பு பணிகள் தொடர்ந்தன. அப்படியிருந்தும் மணலுக்கடியில் இருந்த மக்களை மீட்க எவ்வளோவோ போராடினார்கள். தற்காலிக பாலம் அமைத்து மக்களை காப்பாற்றினார்கள். இதனால், இந்தியா முழுவதும் இந்த பேரிடர் நினைவுக்கூறப்பட்டது.
இதேபோல்தான் தற்போது இந்தோனேசியாவில் ஒரு இயற்கை பேரிடர் நிகழ்ந்திருக்கிறது. தொடர் மழைக்காரணமாக இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவில் உள்ள பெக்கலோங்கன் பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்சரிவும் ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் முழுவதும் மண், பாறைகளால் நிரம்பின.
ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மண்சரிவில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலச்சரிவால் பாலம் ஒன்று நொறுங்கி விழுந்தது. இதனால் மீட்பு பணிகளில் பெரிய சிக்கல் ஏற்பட்டதோடு, நிவாரண பணிகளும் பாதியில் நின்றது. இந்த உடைந்த பாலத்துக்கு அடியில் யாராவது இருக்கிறார்களா என்று மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தாலும் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.