

தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், 3-வது பிரசவத்திற்கும் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பை வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பெண் அரசு ஊழியர்களுக்கு 1980-ம் ஆண்டு முதல் 3 மாதங்கள் மட்டுமே இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை 2011-ம் ஆண்டு முதல் 6 மாதங்களாகவும், 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பை பிறகு 9 மாதங்களாக 2016-ம் ஆண்டு உயர்த்தி உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக 9 மாதங்களாக (270 நாட்கள்) இருந்த பேறுகால விடுப்பு கடந்த 2021-ம் ஆண்டு முதல் 12 மாதங்களாக (365 நாட்கள்) அதிகரிக்கப்பட்டது. கருச்சிதைவு அல்லது சட்டபூர்வமான கருக்கலைப்பு நிகழ்வுகளில், மருத்துவச் சான்றிதழுடன் 6 வாரங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படலாம்.
ஆனால், இந்த விடுப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், பெரும்பான்மையாக இருக்கும் தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் வழக்கம் போல பிரசவ காலத்தில் வேலையை இழக்கும் சூழலே தற்போது வரை நிலவுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும், பி.மங்கையர்க்கரசி என்பவர்.. தனது 3-வது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தமிழக அரசின் தற்போதைய விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதி இல்லை என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண் ஊழியர்கள் தங்கள் 3வது பிரசவத்திற்கும், சம்பளத்துடன் கூடிய முழுமையான பேறுகால விடுப்பை பெற தகுதி உடையவர்கள் என்று உத்தரவிட்டது.
மகப்பேறு நலன் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பை கருத்தில் கொண்டு, இந்த விடுப்பு மறுக்கப்படக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இனிவரும் காலங்களில் எந்தவொரு பெண் ஊழியரும் இதற்காக நீதிமன்றத்தை நாடக்கூடாது என்றும், இந்த தீர்ப்பின் நகலை தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பெண் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அரசு ஊழியர்கள் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய முழுமையான பேறுகால விடுப்பை பெற தகுதி உடையவர்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பது, வரவேற்கத்தக்கது என்றாலும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த சலுகை கிடைத்தால் தான் உண்மையான சந்தோஷம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.