
முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது சைவ பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது. மோமோஸ், ஷவர்மா, சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் போன்ற உணவுப்பொருட்களில் இந்த மயோனைஸ் தொட்டு சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. மயோனைஸ்ன் ஆரோக்கியம், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இது சில ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும் என்றாலும், அதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ளது, எனவே மிதமான அளவு எடுத்துக்கொள்வது முக்கியமானது.
ஹோட்டல்கள் பொதுவாக சாலடுகள், சாண்ட்விச்கள் மற்றும் பசியைத் தூண்டும் உணவுகள் போன்ற பல்வேறு உணவுகளுக்கு மயோனைசை ஒரு சுவையூட்டலாகப் பயன்படுத்துகின்றன. ஒரு ஹோட்டல் சூழலில் மயோனைசேவை அளவோடும் அதன் ஊட்டச்சத்து விவரம் குறித்த விழிப்புணர்வுடனும் உட்கொண்டால் அது ஆரோக்கியமான உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
அதுமட்டுமின்றி இதில் பயன்படுத்தப்படும் எண்ணெயைப் பொறுத்து, மயோனைசேவில் நிறைவுற்ற கொழுப்பு இருக்கலாம், இது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பல வணிக மயோனைஸ்களில் சோடியம் அதிகமாக உள்ளது. தற்போது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகவே மாறிவிட்டது மயோனைஸ்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் மயோனைசுடன் மோமோஸ் சேர்த்து சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைசுக்கு அம்மாநில அரசு ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டது.
வேகவைக்கப்படாத முட்டையில் இருந்து தயாரிக்கக்கூடிய மயோனைசில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகமாக இருப்பதாலும், சில உணவகங்களில் மயோனைஸ் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு அதிக நாட்கள் சேமித்து வைக்கப்பட்டு பரிமாறப்படுவதாலும் சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதனால் முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மயோனைஸை உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்யவும் தடை விதித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உணவகங்களின் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில், கடந்த 8-ந்தேதியிலிருந்து ஓராண்டுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மயோனைஸ் சரியாக கையாளப்படாவிட்டால் சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவால் உணவு விஷமாதல் நிலையை அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. மயோனைஸ் கெட்டு போனால் உணவு விஷமாகி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும்.
இதேபோல மயோனைஸ் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும். உடல் எடையும் கணிசமாக அதிகரிக்கும். ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மயோனைஸ் சாப்பிடுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இதய நோய்க்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.