
பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளுடன் தொட்டுக்கொள்ளப்படும் மயோனைஸ், அதன் சுவைக்காக பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. கிரீம் போல மென்மையான இந்த உணவு வகையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிறார்கள். ஆனால், இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உடல்நல அபாயங்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மயோனைஸ் ஒரு புதுமையான உணவு வகையாக இருந்தாலும், அதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து கொள்வது அவசியம். பொதுவாக மயோனைஸ் தயாரிக்க அதிக எண்ணெய் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அசைவ மயோனைஸ் பச்சை முட்டையில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட மயோனைஸை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதா? பல ஊட்டச்சத்து நிபுணர்கள் மயோனைஸ் அதிகளவு உட்கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர். முக்கியமாக, இது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
மயோனைஸ் நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்தாது என்பது உண்மைதான். ஆனால், அதை அதிகமாக சாப்பிடுவது இதயத்திற்கு நிச்சயம் நல்லதல்ல. காரணம், மயோனைஸில் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் உள்ளன. இந்த கொழுப்புகள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், மயோனைஸில் சோடியம் உப்பு அதிக அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை உயர்த்தும். உயர் இரத்த அழுத்தம் இதய நோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்று. மேலும், மயோனைஸில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. ஆனால் கலோரிகள் மிக அதிகம். இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
உடல் எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆபத்தை அதிகரிக்கும். சிலருக்கு மயோனைஸில் சேர்க்கப்படும் முட்டைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மயோனைஸ் சாப்பிட்டவுடன் ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டால், அதை மீண்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பவர்கள் மயோனைஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவரின் ஆலோசனை பெற்று, குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். மயோனைஸ் சாப்பிடும்போது, நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சுவைக்காக எதையும் அதிகமாக உணவில் சேர்ப்பது உடல் நலத்திற்கு ஆபத்தானது. எனவே, மயோனைஸை அளவோடு சாப்பிட்டு, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது இதய நலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஆரோக்கியமான உணவு பழக்கமே, மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.