
சமீபத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் பலியாகி உள்ளனர். இந்த சோகம் ஓயும் முன்னர் ஜப்பான், அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகிலேயே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப் படக்கூடிய நாடுகளில் ஒன்றான ஜப்பான், நிலநடுக்கம் வரும் முன்னர் கண்டறியும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுக்க எச்சரிக்கை வசதி அமைப்புகளை நிறுவியுள்ளது.
ஜப்பானின் பூகம்ப ஆராய்ச்சிக் குழு அடுத்த 30 ஆண்டுகளுக்குள் மெகா நிலநடுக்கம் ஒன்று ஜப்பானில் ஏற்பட்டு, பேரழிவை உண்டாக்கும் என்று எச்சரித்துள்ளது. மெகா நிலநடுக்கம் என்பது மிகவும் சக்திவாய்ந்த பூகம்பமாகும். இது பொதுவாக 9 ரிக்டர் அளவில் இருக்கும். இந்த மெகா நிலநடுக்கம் கடலில், மிகப்பெரிய சுனாமியையும் ஏற்படுத்தி பல கடற்கரை நகரங்களை மூழ்கடிக்கும் என்றும் பீதியை கிளப்பி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நாட்டில் உள்ள பல பெரிய கட்டிடங்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், சுனாமி பேரலைகள் தாக்கியும் சுமார் 3 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் வீடற்றவர்களாக மாறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடந்தால், ஜப்பானின் பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.171 லட்சம் கோடிக்கு மேல்) இழப்பை சந்திக்க நேரிடும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கு சமமான பொருளாதாரம் அழியும், என்றும் அரசாங்கம் ஒரு புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் உள்ளது நான்கை அகழி. இந்த அகழி கடந்த 1400 ஆண்டுகளில், ஒவ்வொரு 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூகம்பங்களை உருவாக்குகிறது.
இதன் இறுதி பெரிய பூகம்பம் 1946களில் நிகழ்ந்தது. நான்கை அகழி டோக்கியோவின் மேற்கே உள்ள ஷிசுவோகாவிலிருந்து கியூஷுவின் தெற்கு முனை வரை நீண்டு கிடக்கும் 800 கிலோமீட்டர் நீளமுள்ள கடலுக்கடியில் உள்ள அகழி ஆகும். இது பிலிப்பைன்ஸ் கடலின் டெக்டோனிக் கண்டத் தட்டுக்கு அடியில் மெதுவாக மூழ்கி வரும் அகழியாகும். காலப்போக்கில் இந்தத் தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மிகப் பெரிய கண்டத் தட்டுகள் மோதுவதால் ஏற்படும் அதிர்வுகள் பூகம்பமாகவும் சுனாமியாகவும் வெளியே வருகிறது.
கடந்த ஆண்டு, நான்கை அகழியின் அருகில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மெகா பூகம்பம் வருவதற்கான சிறிய எச்சரிக்கை என்று ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கிறது.
ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பெரிய சுனாமியும் தாக்கியது. இந்த சுனாமி புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் கசிவை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து சுனாமி மற்றும் அணு உலையின் கதிர்வீச்சு கசிவுகள் காரணமாக 18000 க்கும் மேற்பட்ட ஜப்பானிய மக்கள் பலியாகினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.