

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு மகளிர் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்த நிலையில், இத்திட்டத்தில் பயன்பெறாத பெண்களும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகையைப் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து ஆண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மைதானா அல்லது வதந்தியா என்பதற்கு தமிழக அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நீங்கள் ஆணாக இருந்தால் மட்டுமே போதும்; உங்களுக்கு தமிழக அரசின் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும். இதற்காக நீங்கள் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்தால் போதும் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனை உண்மை என நம்பி பலரும் செயலியை பதிவிறக்கம் செய்வதோடு, சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், தற்போது இதுகுறித்த உண்மைத் தன்மையை வெளியிட்டுள்ளது. தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் ஆண்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் பயன்பெற, நீங்கள் அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும். இந்த மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளை தடையின்றி படித்தால், கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில் அனைத்து ஆண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற பொய்யான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் பொய் என்பதால், பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம். மேலும் இந்த பொய்யான தகவலை யாருக்கும் பகிர வேண்டாம்.
இதன் மூலம் சைபர் கிரைம் மோசடியில் நீங்கள் சிக்கிட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் அதிகாரபூர்வமற்ற வீடியோக்களை நம்பி, தேவையற்ற செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களில் சைபர் கமோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை உண்மையென யாரும் நம்பிட வேண்டாம். ஏனெனில் இதுபோன்ற பொய்யான தகவல்களின் தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க பணத்தை இழந்தவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஆகையால் சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்கும் செய்தி, உண்மைதானா என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம்.