

இந்தியா இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிவேக பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில்,அதற்கு இணையாக சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் பணம் பறிப்பு, வெடிகுண்டு மிரட்டல், பாலியல் தொந்தரவு என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நாட்டில் சுமார் 46.7 கோடிக்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். சைபர் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 50 சதவீதம் வரை அதிகரிப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கணினி, கைப்பேசி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலமாக 35 வகையான சைபர் குற்றங்கள் ஆண்டுக்கு 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு பெண்களையும், ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப்படுபவர்களையும் பாதுகாக்க சிறப்புச் சட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தொலைத்தொடர்புத் துறை, விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள்/பயனர்களை அடையாளம் காண வசதியாக மொபைல் எண்ணைப் பயன்படுத்தி செயலி அடிப்படையிலான தொடர்பு சேவைகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகிறது.
தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்ட தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு திருத்த விதிகள், 2025, ஒவ்வொரு வாட்ஸ்அப் கணக்கும் எப்போதும் செயலில் உள்ள சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கோருகிறது. டிஜிட்டல் தளங்களில் கடுமையாக அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் ஸ்பேமைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட 90 நாட்களில் இருந்து, செயலி அடிப்படையிலான தொடர்பு சேவைகள் சாதனத்தில் செயல்பாட்டில் உள்ள சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் குறிப்பிட்ட, செயலில் உள்ள சிம் இல்லாமல் செயலியைப் பயன்படுத்த இயலாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விதிமுறைகளின் கீழ், வாட்ஸ்அப் மற்றும் இதே போன்ற சமூக வலைதளப்பயன்பாடுகளுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். புதிய கட்டமைப்பு, ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் பயனர்களை தானாகவே வெளியேற்றும். அணுகலை மீண்டும் பெற பயனர்கள் மீண்டும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இந்த புதிய விதிகள், இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றக்கூடும்.. அதேபோல் வைஃபை மட்டும் டேப்லெட்களை நம்பியிருப்பவர்கள் அல்லது அடிக்கடி சாதனங்களை மாற்றுபவர்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் செயலி சார்ந்த தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் உத்தரவுகள் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) இணக்க அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், தொலைத்தொடர்புச் சட்டம், 2023, தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை எச்சரித்தது.
இந்த உத்தரவுபடி, இந்தியாவில் WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, Sharechat, Jiochat, Josh உள்ளிட்ட சமூக வலைத்தள செயலி அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகள், செயலில் உள்ள சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இனிமேல் செயல்படும். அதாவது, மத்திய அரசின் சமீபத்திய உத்தரவு, பயனரின் சாதனத்தில் சிம் இருந்து செயலில் இருந்தால் மட்டுமே இந்த செய்தி சேவைகள் செயல்படும் என்பதாகும்.
இந்த நடவடிக்கைகள் மோசடியான தகவல்தொடர்புகளைக் கண்டறிவதை எளிதாக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து செயலற்ற அல்லது துண்டிக்கப்பட்ட சிம்களை இந்தியாவில் ஃபிஷிங் தாக்குதல்கள்(Phishing Attack) அல்லது நிதி மோசடிகளை நடத்துவதற்குப் பயன்படுத்துவதால், இந்த மாற்றங்கள் சர்வதேச மோசடிகளைச் சமாளிக்க உதவும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
அதுகுறித்து வாடிக்கையாளர்கள் தெளிவு பெற வேண்டும். இல்லாவிட்டால் தகவல் இழப்பு அல்லது சேவை முடக்கம் உள்ளிடட பாதிப்புகளை சந்திக்கலாம்.
அதுபோல சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இனி எளிதில் அடையாளம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.