

உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் சாட்டிங் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளுடன் வாட்ஸ்அப் செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக பல செயலிகள் அறிமுகமான நிலையில், எந்த செயலியும் பெரதாக முன்னேற்றம் காணவில்லை. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்க மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம். இந்நிலையில் வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக ஒரு இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் ஏற்கனவே உலகளாவிய பொறுப்புகளை வகித்து வரும் நிலையில், ஒரு சமூக ஊடக செயலிக்கு இந்தியர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலமான ஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பை சிறந்த சேவையாக மாற்றவே உலகளாவிய தலைவராக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளதாக மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் சாட்டிங் செயலியின் உலகளாவிய தலைவராக வில் கேத்கார்ட் கடந்த 7 ஆண்டுகளாக பதவி வகித்தார். இவர் தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதால், குணால் ஷா தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து விலகினாலும், வில் கேத்கார்ட் மெட்டா நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம், கிரெட் நிறுவனத்தில் சுமார் 900 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.8,550 கோடியாகும். கிரெட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 20% பங்குகளை மெட்டா வைத்திருப்பதால் தான், குணால் ஷா-வுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான வசதிகளை மேம்படுத்துதல், யுபிஐ உள்ளிட்ட வணிக ரீதியிலான பயன்பாடுகளை அதிகரித்தல் மற்றும் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைதல் ஆகியவை புதிய தலைவர் குணால் ஷா-வின் இலக்காக இருக்கும்.
குணால் ஷா வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், கிரெட் நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மித்தன் சம்பத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு இந்தியர் உலக அளவில், இவ்வளவு பெரிய சமூக ஊடகத் தளத்திற்கு தலைவராக பொறுப்பு வகிப்பது வரலாற்றில் மிகச் சிறப்பான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சுந்தர் பிச்சை சாதனை படைத்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது குணால் ஷா-வும் சாதனை படைத்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரத்யேக வசதிகளுடன் கூடிய சந்தா செலுத்தக் கூடிய வாட்ஸ்அப் பிளஸ் அறிமுகமானது. இதன்படி மாதந்தோறும் ரூ.79 கட்டணத்தில் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது புதிய தலைவராக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளதால், வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் கொண்ட வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த குணால் ஷா:
மும்பையைச் சேர்ந்த குணால் ஷா, தத்துவவியல் துறையில் பட்டம் பெற்றவர். 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்த இவர், சுறுசுறுப்பான ஏஞ்சல் முதலீட்டாளர்களில் ஒருவர்.
இதற்கு முன்னதாக Freecharge என்ற ஆன்லலன் ரீசார்ஜ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார்.
கடந்த 2018-ல் கிரெட் என்ற ஃபின்டெக் நிறுவனத்தைத் தொடங்கினார் குணால் ஷா. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே இந்தியாவில் நல்ல வரவைற்பு கிடைக்கவே, உலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கிரெட்டில் முதலீடு செய்தன.
தற்போது கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவோருக்கு பரிசுகளை வழங்கும் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனமாக கிரெட் திகழ்கிறது