

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சின்னசாமி மற்றும் வி.எஸ்.காளிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்தார்.
அப்போது எதிர்த்துப் பேசினால் தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நினைத்து பேசிய எதிர்க்கட்சிக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்தார் முதல்வர்.
முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில், “நான் சினிமா மீட்டிங்கில் இருந்து நேராக முதல்வரான மாதிரி பலரும் பேசுகிறார்கள். ஆனால் நான் மக்களின் இதயங்களை வென்றெடுத்து முதல்வர் ஆனேன். எனது வெற்றிக்கு நான் மட்டும் காரணம் அல்ல; மக்களின் அன்பும், அரவணைப்பும் தான் முக்கிய காரணம்.
1990 ஆம் ஆண்டுகளிலேயே ரசிகர் மன்றத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். நான் நடித்த பல திரைப்படங்களில் சமூக நீதி, கல்வி மற்றும் ஊழல் பற்றி பேசி இருக்கிறேன். அரசியல் பற்றி பேசியதாலேயே எனது படங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றன. தவெக-வை தொடங்கிய உடனே சிஏஏ-வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டோம்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கை இல்லை என நாங்கள் வெளிப்படையாக அறிவித்தோம். அதோடு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் அறிவித்தோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை அறிவித்து தான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதோடு கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரி யார் என்பதை நாங்கள் வெளிப்படையாகவே அறிவித்தோம்.
100% தூய்மையான ஆட்சி என்பதை மட்டுமே இலக்காக கொண்டுள்ளோம். ஒரு குடும்பம் மட்டும் முக்கியமல்ல; தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் முக்கியம். பணம் கொடுத்து ஓட்டை வாங்கும் நச்சு நாகரிகத்தை அடியோடு வேரறுத்துள்ளோம். 2017 முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள், ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை நாங்கள் அடைத்து வருகிறோம்.
தவெக நடிகர் கட்சி என கிண்டல் செய்தனர். ஆனால் இப்போது தவெக தான் ஆளுங்கட்சி. கரூர் சம்பத்தில் 41 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் என் மீது பழி போட்டனர். இருமொழிக் கொள்கையில் எங்கள் நிலைப்பாடு மாறாது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். மின்வெட்டைத் தடுக்க 10 உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் மின்வெட்டு பிரச்சினை முடிவுக்கு வரும். இதுவரை 717 டாஸ்மாக்குகள் மூடப்பட்டுள்ளன. இனியும் அதிரடியான நடவடிக்கைகள் தொடரும்” என முதல்வர் பதிலளித்தார்.
சட்டமன்றத்தில் முதல் விஜய் பேசும் போது, டாஸ்மாக் மூடல் குறித்த பதிலுக்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திமுக எம்எல்ஏக்களை எதிர்த்து ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் பேசியதால் சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் 10 உயர் மட்ட குழுக்களை அமைத்திருக்கிறோம் என முதல்வர் பேசியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் மின்வெட்டு பிரச்சினை விரைவில் சீராகும் எனத் தெரிகிறது. அதோடு ஜூலை முதல் மின் கட்டணம் உயரும் எனத் தகவல் வெளியானதை, தமிழக அரசு மறுத்துள்ளது.