
சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும் மெட்ரோ பயணிகள் ரயில் நிலையங்களை அடைவதற்கு ஏதுவாக போதிய பேருந்து வசதிகள் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்வதில் அதிக சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திடம் சிறிய அளவிலான மினி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் மினி பேருந்துகளை இயக்குவது கடினம் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மைக்ரோ பேருந்துகளை இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது சென்னை போக்குவரத்துக் கழகம் 11 வழித்தடங்களில் மொத்தம் 22 சிறிய பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்தப் பேருந்துகள் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதோடு சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் பேருந்து சேவையை விரிவாக்கம் செய்ய கூடுதலாக இருபது பேருந்துகளை இயக்க கோரிக்கை விடப்பட்டது.
அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளான கோயம்பேடு, சென்னை விமான நிலையம், விம்கோ நகர், ஆலந்தூர் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் பேருந்து சேவையை அளிக்க வேண்டும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் சென்னை போக்குவரத்து கழகத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயணிகளின் அசௌகரியத்தை போக்கும் விதமாக கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னைப் போக்குவரத்து கழகத்திடம் கடிதம் மூலமாக கோரிக்கை விடப்பட்டது. அவர்களிடம் பேருந்துகள் அதிகளவில் இருக்கின்றன. ஆனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முன்வரவில்லை. பேருந்துகளை இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்க முன்வந்தது” என்று அவர் கூறினார்.
பேருந்து போக்குவரத்தால் பயணிகள் சந்திக்கும் பிரச்சினையைத் தீர்க்க, தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மைக்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏழு இருக்கைகள் கொண்ட மைக்ரோ பேருந்துகள், சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்தையும் சுற்றி 5 கி.மீ. தொலைவிற்கு இந்த மைக்ரோ பேருந்துகள் இயக்கப்படும். ரயில் நேரத்திற்கு ஏற்றவாறு மைக்ரோ பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்தவுடனேயே பயணம் செய்ய எளிதாக இருக்கும்.
12 இருக்கைகள் கொண்ட மைக்ரோ பேருந்துகள், 21 இருக்கைகள் கொண்ட மினி பேருந்துகள் மற்றும் 35 இருக்கைகள் கொண்ட நடுத்தர பேருந்துகள் உள்பட 700 பேருப்ந்களை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான டெண்டர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.