டிக்டாக்கை வாங்க பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் டிக் டாக் செயலி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன்மூலம் பல சாதாரண மக்களும் வீடியோ பதிவிட்டு ஃபேமஸ் ஆனார்கள். பலருக்கு நடிக்கும் வாய்ப்பு போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. இந்தியாவிலும் பலர் பயனடைந்தார்கள். இதன்பின்னர் பல செயலிகள் இதுபோல் வந்தாலும், டிக் டாக் மட்டுமே மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால், இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்னர் இந்த செயலி தடை செய்யப்பட்டது. திடீரென்று தடை செய்யப்பட்டதால், டிக்டாக் பயணாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். அதன்பின்னர் பல செயலியகளும், இன்ஸ்டாவில் ரீல்ஸ்களும் வந்தாலும், டிக்டாக் பிரபலங்கள் பலர் டிக் டாக் தடைக்கு பின்னர் அப்படியே காணாமல் போய்விட்டனர்.
இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவில் 17 கோடிக்கு அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. மேலும், டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டது. அமலுக்கு வருவதற்கு முன்னரே பலரால் இந்த செயலியை பயன்படுத்த முடியவில்லை.
ஆனால், அதன்பின்னர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் டிக்டாக் செயலி அனுமதிக்கப்பட்டது. இதனால், டிக்டாக் நிறுவனம் ட்ரம்பிற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்தது.
இந்தநிலையில்தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். ஆனால், இதுகுறித்து மைக்ரோசாப்ட்டும், டிக்டாக்கும் எந்தவித கருத்துக்களையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அடுத்த 30 நாள்களுக்குள் முடிவு தெரியவரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
டிக்டாக் செயலியின் உரிமையாளரான ‘பைட் டான்ஸ்’ நிறுவனம், அமெரிக்கர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
எனவே, தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு ‘பைட் டான்ஸ்’ நிறுவனம் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டும் என்ற சட்டம், ஜனவரி 19ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
ஆனால், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றப் பின்னர் இந்த அமலாக்கத்தை 75 நாட்கள் தள்ளி வைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.