
பழங்காலத்தில் இருந்தே அரபு நாடுகளின் பெருமையாகத் திகழும் பேரிச்சம்பழம் இன்று உலகளாவிய அளவில் ஆரோக்கிய உணவாகப் பாராட்டப்படுகிறது. இந்த பழத்தின் மகத்துவத்தை உலகிற்கு அறிவிக்கும் வகையில் உலகின் முதல் பேரிச்சம்பழக் கோலாவை அறிமுகப்படுத்தி புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. “மிலாப் கோலா (Milaf Cola)” எனப் பெயரிடப்பட்ட இந்த பானம் வழக்கமான கார்பனேட்டட் சோடாக்களுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவின் துரத் அல்-மதினா என்ற பொதுத்துறை நிறுவனம் தயாரித்துள்ள இந்த பானத்தின் சிறப்பம்சமே அதில் சர்க்கரை சேர்க்கப்படாததுதான். பேரிச்சம் பழத்தின் இயற்கை இனிப்புத் தன்மையே இதற்கு போதுமான இனிப்பைத் தருகிறது. மேலும், உடலுக்கு நன்மை பயக்கும் மெக்னீசியம், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
உலக அளவில் அதிகமாக பேரிச்சம் பழம் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் சவுதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 1.6 மில்லியன் டன் பேரிச்சம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காசிம், மதீனா, ரியாத் ஆகியவை பேரிச்சம்பழம் உற்பத்தி செய்யப்படும் மிக முக்கிய இடங்களாகும். நாடு முழுவதும் 3 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பேரிச்சம் பழம் மரங்கள் உள்ளன. இத்தனை ஆண்டுகளாக விவசாயிகள் பேரிச்சம்பழத்தை ஒரு முக்கிய பயிராகக் கருதி வந்தாலும், அதிலிருந்து ஒரு புதிய பானத்தை உருவாக்கும் யோசனை மிகவும் புதுமையானது.
சவுதி அரேபியாவில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட பேரிச்சம் பழ வகைகள் உள்ளன. இதில் வெறும் நாற்பது வகைகள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல்வேறு வகையான பேரிச்சம் பழங்களை பயன்படுத்துவதன் மூலம் மிலாப் கோலாவின் சுவையை மேலும் மேம்படுத்த முடியும். இந்த கோலா எதிர்காலத்தில் சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என இதன் தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
வழக்கமான சோடாக்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்கள் இருக்கும். ஆனால் மிலாப் கோலாவில் துளிகூட சர்க்கரை இல்லை. இது சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஆரோக்கியத்தை கவனிக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். எனவே, இந்த கோலா சவுதி அரேபியாவின் முன்னோடி பானமாக பார்க்கப்படுகிறது. இது அந்நாட்டின் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.