முன்பெல்லாம் சாப்பிட்டதும் சூடாக ஒரு காபி அல்லது டீ குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போது பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிட்டவுடன் கண்டிப்பாக சோடா அல்லது குளிர்ச்சியான குளிர்பானம் குடிப்பதை நிறைய பேர் ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றனர். காரணம், அது ஜீரணத்திற்கு உதவும் என்று பலரும் நினைக்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு எச்சில், வயிறு, கல்லீரல் போன்றவற்றில் இருந்து வரும் Enzymesதான் முக்கிய காரணமாகும். இந்த enzymesதான் நாம் சாப்பிடும் உணவுகளை உடைத்து அது ஜீரணமாக உதவுகிறது.
சோடா மற்றும் குளிர்பானங்கள் என்றால் வேறு எதுவுமில்லை, வெறும் Carbonated waterதான். இனிப்பான தண்ணீரில் கார்பன் வாயுவை அடைத்து வைத்திருப்பதையே நாம் குளிர்பானம் என்று வாங்கிப் பருகுகிறோம்.
சோடா மற்றும் குளிர்பானத்தை உணவு சாப்பிட்ட உடன் அருந்தினால் ஜீரணமாவது போன்ற உணர்வு வருவதற்குக் காரணம், சோடாவில் அதிக அழுத்தத்தில் கார்பனை ஏற்றி வைத்திருப்பார்கள். அதை அருந்தியதும் நம் வயிற்றுக்குள் சென்று கார்பன் பிரிந்து வெளியே வந்துவிடும். அது ஒரு நல்ல ஏப்பமாக வெளிவரும்.
நாம் வழக்கமாக உணவு சாப்பிடும்போது சாப்பாட்டுடன் சிறிது காற்றும் வயிற்றுக்குள் சென்றுவிடும். இது இயற்கையாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். எனவே, சோடா குடித்ததும் அதில் இருந்து வெளியேறிய கார்பன் வாயுவுடன் வயிற்றிற்குள் சாப்பிடும்போது சென்ற சிறிது காற்றும் சேர்ந்து வெளியே வரும். அந்த வாயுக்கள் வெளியேறுவது நம்முடைய வயிறு லைட்டாக ஆனது போன்ற ஒரு உணர்வை நமக்குக் கொடுக்கும்.
ஆனால், உண்மையிலேயே சோடா குடிப்பது நமக்கு எந்த விதத்திலுமே ஜீரணத்திற்கு உதவுவது கிடையாது. எனவே, சோடாவிற்கும், ஜீரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குளிர்பானங்கள் அதிகம் குடிப்பதால் அதில் உள்ள சர்க்கரை அதிகமாக உடலில் சேர்ந்து உடலுக்குக் கெடுதலைத்தான் ஏற்படுத்துமே தவிர, அதனால் எந்தப் பயனும் கிடையாது. சாப்பிட்ட உடன் சோடா, குளிர்பானம் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை விட்டுவிடுவது சிறந்தது. அதற்கு பதில் சோடாவில் லெமன் சேர்த்து, சிறிது உப்பு போட்டு குடித்தால் லெமனில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களாவது உடலுக்குக் கிடைக்கும். இதை முயற்சித்துப் பாருங்களேன்.