

எதையும் சமாளித்துவிடலாம் என்று வீட்டுக்கடன் வாங்கும் பலருக்கும் எவ்வளவு திட்டமிட்டாலும் சிலசமயங்களில் EMI -யை கட்ட முடியாமல் தள்ளி போகும் சூழல் ஏற்படும். வீட்டுக் கடன் EMI செலுத்தத் தவறினால், உங்கள் வீடு ஏலம் விடப்பட்டு, செலுத்தப்படாத கடன் தொகையை வசூலிக்கும் வாய்ப்பு உட்பட, கடுமையான விளைவுகள் ஏற்படலாம். எனவே கொஞ்சம் திட்டமிட்டால் அந்த சூழலை தள்ளிப்போடலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.
அதாவது வீட்டுக் கடனுக்கான முதல் தவணை கட்டாத நிலையில், இரண்டாவது தவணையும் தவறினால், உங்களின் நிதி நிலையை அனுசரித்து தவணைக்கான பணம் கட்ட ஓரிரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படலாம். அதற்குள் இரு தவணை பாக்கி மற்றும் அபராத்தைக் கட்டிவிட்டால், வீட்டுக் கடன் சிக்கல் எதுவும் இல்லாமல் வழக்கம்போல் தொடரும். ஆனால் தொடர்ந்து மூன்று மாதம் தவணையும் கட்ட தவறும் பட்சத்தில், வங்கியானது சட்டப்படியான நடவடிக்கைகளை (Legal Proceedings) எடுக்கத் தொடங்கும்.
எனவே கடன் வாங்கியவர் தொடர்ந்து மூன்று மாதத்துக்குமேல் வீட்டுக் கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும் என முன்பே தெரிந்தால், முன்கூட்டியே வங்கி மேலாளரை அணுகி, நிலைமையை விளக்கிச் சொல்வது நல்லது. இதனால், சில மாதங்களுக்கு மாதத் தவணைகள் கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கலாம். தேவைப்படும் பட்சத்தில் கடன் காலத்தை அதிகரித்து, மாதத் தவணையைக் குறைக்க முடியும்.
உண்மையில் சட்டம் கடன் வாங்குபவர்களுக்கு இவ்வளவு சீக்கிரம் அதாவது 90 நாட்களுக்குள் உங்கள் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடுகிறதாக என்றால், அதுதான் இல்லை. உங்கள் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடுவதற்கு முன்பு, உங்களுக்குச் சட்டப்பூர்வமாக 105 நாட்கள் அவகாசம் உள்ளது.
நீங்கள் முதல் தவணையைச் செலுத்தத் தவறிய தேதியிலிருந்து 90 நாட்கள் கடந்த பின்னரே உங்கள் கடன் கணக்கு 'வாராக் கடன்' அல்லது என்.பி.ஏ. (Non Performing Asset -NPA) என்று வகைப்படுத்தப்படும். அதற்குள் நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்திவிட்டால் சிக்கல் ஏதுமில்லை. இல்லையெனில் அந்த வீட்டை வங்கி அதன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்; ஏலத்துக்கு விட்டு, மொத்தக் கடன் தொகையைக் கழித்துக்கொண்டு, மீதித் தொகை இருந்தால், வீட்டுக் கடன் வாங்கியவருக்குத் தரும்.
அதாவது, கடன் ‘வாராக் கடன்' ஆனவுடன், வங்கி உங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்து 'டிமாண்ட் நோட்டீஸ்' (Demand Notice) அனுப்பும். ‘அடுத்த 60 நாட்களுக்குள் உங்கள் மொத்தக் கடனையும் செலுத்துங்கள், இல்லையெனில் உங்கள் வீட்டை நாங்கள் கையகப்படுத்துவோம்’ என்பதே இதன் பொருள்.
வங்கி உங்களுக்கு அனுப்பும் நோட்டீசுக்கு நீங்கள் ஆட்சேபனைகளை பதிலாக தெரிவிக்கலாம். உங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ வங்கிக்கு 15 நாட்கள் அவகாசம் உண்டு. அதேசமயம் ஒருவேளை வங்கி உங்கள் விளக்கத்தை நிராகரிக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை வங்கி எழுத்துப்பூர்வமாக உங்களுக்குத் தெரிவிக்கும்.
வீட்டு கடனுக்காக நீங்கள் கட்டவேண்டிய 3 EMI தவறும் பட்சத்தில், வங்கி உங்கள் சொத்தைக் கையகப்படுத்தி (Possession), அதை விற்பனை செய்வதற்கு முன் மீண்டும் 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து உங்களுக்கு ஒரு 'விற்பனை நோட்டீஸ்' (Sale Notice) அனுப்ப வேண்டும்.
மற்ற சிவில் வழக்குகளைப் போலன்றி, வீட்டுக் கடன் வசூலில் வங்கிகள் நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. நீதிமன்றத் தலையீடு இன்றி, சர்ஃபேசி (SARFAESI) சட்டத்தின் 13(1) பிரிவின்படி, வங்கிகள் நேரடியாகச் சொத்தை ஏலம் விடலாம் என்றாலும், வங்கிகள் மாவட்ட ஆட்சியர் அல்லது மெஜிஸ்ட்ரேட் உதவியுடன் தான் சொத்தைக் கையகப்படுத்த முடியும்.
உங்கள் சொத்து ஏலத்திற்கு வரும் வரை உங்கள் வீட்டை மீட்பதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஏல நடைமுறைகள் முடிந்து 'விற்பனை சான்றிதழ்' (Sale Certificate) வழங்கப்படுவதற்கு முன்பு, நீங்கள் வங்கியின் வட்டி மற்றும் இதர செலவுகளுடன் கூடிய மொத்த நிலுவைத் தொகையை செலுத்தும் பட்சத்தில், ஏலத்தை நிறுத்திவிட்டு உங்கள் வீட்டை மீட்க முடியும்.
எனவே வீட்டுக் கடனுக்கான தவணை கட்டாத நிலையில், ஒருமுறை நோட்டீஸ் வந்தவுடன் பயந்துவிடாமல், பதற்றம் அடையாமல் வங்கியுடன் கலந்து பேசி 'திருத்தப்பட்ட நோட்டீஸ்' (Revised Notice) பெற முடியுமா என்று பாருங்கள். அவ்வாறு நோட்டீஸ் திருத்தப்பட்டால், காலக்கெடு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.
அதேபோல் ஒருசிலர், சிலமுறை மாதத் தவணையைத் தாமதமாகக் கட்டி, பின்னர் அதையே பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்படி தொடர்ந்து தாமதமாக EMI கட்டிவரும் நிலையில், கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறையும்; இதனால் எதிர்காலத்தில் எந்தக் கடனும் வாங்க முடியாது. மேலும், EMI தாமதக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி இருக்கிறது. தவணை கட்டுவதில் சிக்கலைத் தவிர்க்க, வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில் கடன் தவணை 40 சதவிகிதத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது கட்டாயமாகும். மேலும், குறைந்தபட்சம் ஒரு மாத EMI தொகை வங்கிக் கணக்கில் எப்போதும் கூடுதலாக வைத்துக்கொள்வது அவசியம்.
கடன் வாங்கும் முன், முதலீட்டை ஆரம்பிக்கும் முன் ஒருவர் அவரின் மாதச் செலவுகளைப் போல் குறைந்தது 3 முதல் 6 மடங்கு தொகையை அவசர கால நிதியாகச் சேர்த்து வைக்க வேண்டும் என நிதி நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆறு மாதச் செலவு தொகையைச் சேர்த்து வைக்கும் போது திடீர் உடல் நலக்குறைவு, வேலை இழப்பு போன்றவற்றின்போது குடும்பச் செலவுகள் மற்றும் கடன் தவணைகளைச் சுலபமாக மேற்கொண்டு நிலைமையை சுமுகமாக சமாளிக்க முடியும். இது வரைக்கும் அவசரகால நிதியை சேர்ந்த்து வைக்கவில்லை எனில், இனி கண்டிப்பாக சேர்த்து வையுங்கள்.
எனவே வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவது முக்கியம் அல்ல. அந்த கடன் தவணையை மாதந்தோறும் தவறாமல் சரியாக கட்டும்பட்சத்தில் மட்டுமே அதிக கடன் சுமை ஏற்படாது என்பது நிச்சயம்.