

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழக அரசியல் களம் தினமும் புதுப்புது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிகப்பெரியளவில் திமுக வெற்றிபெற்று ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 22 கட்சிகளுடன் மெகா கூட்டணியை திமுக அமைத்திருந்த போதிலும் தோல்வியை சந்தித்தது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 60 ஆண்டுகளுக்கும் மேலான திரவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் மகத்தான வெற்றியை பெற்றது. குறிப்பாக திமுக தான் இந்த தேர்தலிலும் வெற்றிபெறும் என பலரால் கணிக்கப்பட்ட சூழலில் தவெக வெற்றிபெற்றது பலருக்கும் ஆச்சர்யமாகவும் சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது.
தற்போது ஆளும் கட்சியாக தவெக செயல்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சியாக திமுக இருந்து வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியில் இருந்து முதலில் காங்கிரஸ் விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து விலகிய நிலையில் தற்போது மதிமுகவும் விலகியுள்ளது. அதேசமயம் விசிகவும் திமுக கூட்டணியில் அதிருப்தியில் தான் உள்ளது.
இதற்கிடையே தவெக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து திமுக தொடர்ந்து தவெகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மறுபக்கம் தவெகவும் சளைக்காமல் திமுகவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட முதல் சில நாட்கள் எதிர்க்கட்சியினர் தவெக மீது கடும் விமர்சனங்களை கூறி வந்தனர். அதன் பிறகு முதலமைச்சர் விஜய் சட்டசபையில் திமுகவை கடுமையாக பேசினார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின்குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலினும் விஜய்யின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம், அதற்கு திமுகவினர் தயாராக இருக்க என்று முக ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை வானகரத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் 5,000 பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களை வரவேற்று பேசிய திமுக தலைவர் முகஸ்டாலின், தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்ததுடன், தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் எனத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரே மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்திற்குச் செல்லும் நிலை உருவாகி உள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, பாலியல் வன்கொடுமை, விவசாயிகளின் போராட்டம் என மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார். தவெக ஆட்சியில் ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள், ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள்.
தொழில் நிறுவனங்கள் புதிய ஆட்சியை நம்பிவர பயப்படுகிறார்கள். இதனால் அண்டை மாநிலங்களுக்கு அவைகள் செல்கின்றன. ஆட்சியைத் தக்கவைக்க மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதிலே இந்த அரசு குறியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டை 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்த்தினோம். தினம் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் திமுக அரசியல் செயல்பட்டது. உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்து தொழில் தொடங்கினர். எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புகள் பெருகியது.
தமிழ்நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு துணையாக திமுக தான் இருக்க வேண்டும். மக்களை காக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. நாம் பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை சீரழிய விடக்கூடாது.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற எந்தத் திட்டத்தையும் நிறுத்த முடியாது. அந்தத் திட்டங்கள் இருக்கும் வரையிலும் இந்த முக ஸ்டாலின் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். அதுதான் நமக்கு பெருமை.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசு பெரும்பான்மையின்றித் தவிப்பதைச் சுட்டிக்காட்டினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்னும் 3 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோகூட தேர்தல் வரலாம். ஏனெனில், பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை, ஆனால் தவெக 108 இடங்களில் தான் வெற்றி பெற்றார்கள்.
திமுக வெல்ல வேண்டும், ஸ்டாலின் முதல்வராகவேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில் தவெகவின் வண்டி ஓடுகிறது. வண்டி எப்போது நிற்கும் என தெரியாது. எனவே, எந்தச் சூழலிலும் தேர்தலைச் சந்திக்க 100% திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
கடந்த திமுக ஆட்சியின் சாதனைகளை ஒப்பிட்டுப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத அளப்பரிய வளர்ச்சியை எட்டியது. நமது ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையால்தான் உலகளாவிய பல்வேறு பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி முதலீடு செய்ய வந்தன.
அண்ணா தொடங்கி, கலைஞர் அவர்களால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்ட தமிழ்நாட்டை நாம் சீரழிய விட்டுவிடக் கூடாது. மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு இப்போது திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது என்று கூறி உரையை நிறைவு செய்தார்.