
இந்தியாவில் வாகனங்கள் வைத்திருக்கும் அனைவருமே, கட்டாயம் வைத்திருக்க வேண்டியது டிரைவிங் லைசென்ஸ் உரிமமாகும்.. ஆன்லைனிலேயே வீட்டிலிருந்தபடியே, ஓட்டுநர் உரிமைத் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது.. அதேபோல, லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்த டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், சில ஆவணங்கள் குறிப்பாக, பிறந்த சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை இதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களாகும்.
இந்நிலையில் லைசென்ஸ் மற்றும் வாகன ஆர்.சி. புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை புதுப்பிக்கும் படி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு அதை மாற்றும்படி கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சேவைகள் பொதுமக்களை எளிதில் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
செயல்படாத தொலைபேசி எண் வாகன ஆவணங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். அதை, சட்டவிரோதமாக பயன்படுத்தலாம் என்பதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
போக்குவரத்து துறையின் பெரும்பாலான சேவைகள் தற்போது ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. பயனர்கள் இந்த சேவைகளை பெறுவதற்கும், முக்கிய தகவல்களை பரிமாறி கொள்வதற்கும் ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு மிகவும் அவசியமாகிறது. ஆனால் பலருடைய மொபைல் எண்கள் மாற்றப்பட்டோ அல்லது பதிவுகளில் இல்லாமலோ இருப்பதால், அரசின் முக்கிய தகவல்கள் அவர்களுக்கு சரியாக சென்றடைவதில்லை என்ற புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான மின்னணு அபராத சீட்டுகள், வாகனக் காப்பீடு, PUC சான்றிதழ் போன்றவை வாகன உரிமையாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.
ஆனால் வாகன பயனரின் சரியான மொபைல் எண் இல்லாத பட்சத்தில், சரியான நபருக்கு இந்த தகவல்கள் கிடைக்காமல், அபராத தொகை அதிகரிப்பது போன்ற தேவையற்ற சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகன மொபைல் எண் புதுப்பிப்புக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஆன்லைன் மூலமாகவே எளிதாக இந்த பணியை முடிக்க முடியும். அதாவது, https://parivahan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள "Update Mobile Number" என்ற இணைப்பிற்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்வதன் மூலம் உடனடியாக நீங்கள் உங்கள் வாகன மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும்.
எனவே, அனைத்து வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது மொபைல் எண்ணை உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுமாறு மத்திய போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது, வாகன ஓட்டிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற தாமதங்கள் மற்றும் சிக்கல்களை தவிர்த்து, அரசின் டிஜிட்டல் சேவைகளை முழுமையாக பயன்படுத்த உதவும் ஒரு முக்கிய படியாகும்.