

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த வருகிறது. இதன் காரணமாகவே தற்போது உலகளவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. 19 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஆதரவளித்து வருவதால், சந்தையில் இதன் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரைப் போலவே, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அறிமுகமானது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் கேஎஃப்சி 20 லீக் தொடர் நடத்தப்பட்டு வந்தது. இந்த தொடருக்கு மாற்றாகவே பிக் பாஷ் லீக் தொடர் 2011-ல் அறிமுகமானது.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் தொடர் புகழ் பெற்றிருந்தாலும், உலகளவில் இந்த தொடருக்கான வரவேற்பு குறைந்த அளவிலே இருக்கிறது. இதன் காரணமாக தற்போது பிக் பாஷ் தொடரை இந்தியாவில் நடத்தினால் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
இதன்படி இந்தியாவிடம் உரிய அனுமதி பெறப்பட்ட நிலையில், 2026-27 பிக் பாஷ் தொடர் சென்னையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ். இதன்படி வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி பிக் பாஷ் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போலவே, பிக் பாஷ் தொடரை உலகம் முழுவதும் புகழ் பெற்ற தொடராக மாற்ற வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்தத் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிக் பாஷ் தொடருக்கு வரவேற்பு அளிப்பார்கள் என்றும் ஆஸ்திரேலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இரண்டு மாதங்கள் நடைபெறும் சூழலில், தற்போது பிக் பாஷ் லீக் தொடரும் நடைபெற இருப்பதால், இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற 2032-ல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை ஆஸ்திரேலியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒன்றுடன் ஒன்றைக் (1+1) கூட்டினால் 2 கிடைக்கும். ஆனால் ஒன்றுடன் ஒன்று இணைந்தால் 11 கிடைக்கும். அவ்வகையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இனி இணைந்தே இருக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்தார்