மோடி அமைச்சரவையின் அடுத்த நிதியமைச்சர் இவரா..! நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக சக்திகாந்த தாஸ்?

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வரும் நிலையில், நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Shaktikanta Das Nirmala Sitharaman
Shaktikanta Das Nirmala Sitharamanimage credit-zeenews.india.com
Updated on

மத்திய மந்திரிசபை ஓரிரு நாளில் மாற்றப்பட இருப்பதாகவும், நிர்மலா சீதாராமனுக்கு பதில் சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் அறிகுறியாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பாஜக தலைவராகவும், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, உத்தரப்பிரதேச பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ரெயில்வே இணை அமைச்சராக உள்ள ரவ்நீத் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

சமீபத்தில் ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த ஜார்ஜ் குரியன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசியது மந்திரிசபை மாற்றத்திற்கான யூகங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

பாஜகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மத்திய அமைச்சரவையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் எந்தெந்த துறைகளில் என்னென்ன மாற்றம் வரும், புதிய மந்திரிகள் யார், பழைய மந்திரிகள் யாரெல்லாம் நீக்கப்படுவார்கள் யார் என்பன பற்றிய பேச்சுகளும் வெளிவரத் தொடங்கி விட்டன.

இந்த வகையில் டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டது நிதித்துறை தான். நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட போகிறாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மாற்றப்பட்டு, புதிதாக வேறு ஒருவர் பொறுப்பேற்க உள்ளதாக சந்தேகத்தினை கிளப்பியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

அதோடு ‘மோடி அரசு மேற்கொண்ட படுதோல்வித் திட்டமான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு (demonetisation) நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்த நாயகர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ் புதிய நிதி அமைச்சரானால் இந்தியாவின் பொருளாதார நிலை என்ன ஆகுமோ!’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவின் தற்போது நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இவர் 2019 முதல் இந்த நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறையைக் கவனித்து வருகிறார். இவருக்கு பதிலாக பிரதமரின் முதன்மை செயலாளரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சக்திகாந்த தாஸ் நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான ஒன்று - ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்!
Shaktikanta Das Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நியமிக்கப்படலாம் அல்லது அவர் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என சொல்லப்படுகிறது.

மேலும் பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து குறைந்தது 2 பேரை மந்திரிகளாக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் மந்திரிசபை மாற்றத்தில் சிறப்பாக கவனிக்கப்படும் என தெரிகிறது.

கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும் நீக்கப்படலாம் என பேச்சுகள் வருகின்றன. வினாத்தாள் கசிவு விவகாரங்களில் இவர் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மந்திரிசபையில் புதிதாக நுழைபவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), ஆம் ஆத்மியில் இருந்து விலகிய ராகவ் சதா, அதுபோல் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய சில எம்பிக்களின் பெயர்களும் அடிபடுகின்றன. பீகார் முன்னாள் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் மந்திரிசபையில் சேர்க்கப்படலாம் என பேசப்படுகிறது. இதுபோல அனுராக் தாக்கூரும் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றத்தின் ஒரு பகுதியாக தற்போதைய 6 இணை அமைச்சர்களும் பதவி பறிப்பு இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் தென்மாநில மந்திரிகள் அதிகம் இருப்பர்கள் என கூறப்படுகிறது.

மந்திரிசபை வலுப்படுத்துவது போல கட்சியை வலுப்படுத்துவதிலும் அக்கறை காட்டப்படுகிறது. இதில் பெண்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல்: 12 லட்சம் வரை வரி விலக்கு!
Shaktikanta Das Nirmala Sitharaman

இதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்பதால், இப்போதே யாருக்கெல்லாம் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com