ஒரு இடத்தில் ஒரு பெண் அழகாக தோன்றினால் போதும், அடிக்கடி பேட்டி எடுத்து, அவரை வைரலாக்கி, அதன் மூலம் தங்கள் சேனல் பார்வைகளை ஏற்றி சம்பாதிக்க பெரும் கூட்டம் அலைகிறது. ஒரு கட்டத்தில் அந்த வைரல் பெண்ணிற்கு இவர்களின் தொல்லை அதிகமாகி, சொந்த வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போதைய பிரக்யாராஜ் கும்பமேளாவில் தனது வெளிறிய நீல நிறக் கண்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் மோனாலிசா.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மோனாலிசா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நாடோடி இனத்தவர். ஊசி பாசி மணிகள் மற்றும் ருத்ராட்ச மாலைகளை குடும்பத்தோடு திருவிழா நடக்கும் இடங்களில் விற்று சம்பாதிப்பது தான் இவர்களின் தொழிலாக உள்ளது. மோனாலிசா தனது தாய் தந்தையர் மற்றும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வாழ்ந்தார். மோனாலிசா அழகிய கண்களுக்கு மட்டுமல்ல, கள்ளம் கபடமற்ற சிரிப்புக்கும் சொந்தக்காரர்.
இந்த மஹாகும்ப மேளாவில்,மோனாலிசா குடும்பத்தோடு மாலை மணிகளை விற்க பிரக்யாராஜ் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு போட்டோகிராபர் கண்களில் சிக்க, அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கின. ருத்ராட்ச மாலைகளை விற்கும் நீலக் கண்ணழகி போன்ற பல தலைப்புகளில் அவரது புகைப்படங்கள் வலம்வரத் தொடங்கின. சமூக ஊடகங்கள் தாண்டி நாட்டின் முக்கிய டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் அவரைப் பற்றிய செய்திகள் பரவியது. நீலநிறக் கண், நீண்ட கூந்தல், கவலையற்ற புன்னகையுடன் கூடிய பெண்ணின் அழகு பலரையும் கவர்ந்தது.
ஒரே நாளில் தேசம் முழுக்க புகழ்பெற்ற மோனாலிசாவை பலரும் புகழ்ந்து தள்ளினர். பாலிவுட் நடிகைகளை விட, இவர் மிகவும் அழகாக உள்ளார் என்று விவாதிக்க தொடங்கினர். பிரபல நடிகை வாமிகா கபியுடன் இவரை ஒப்பிட்டு பேசினர். அழகும் புகழும் அந்த அப்பாவி பெண்ணை பாதிக்கத் தொடங்கியது. மோனாலிசாவை பார்த்து செல்ஃபி எடுக்கவும், பேட்டி எடுக்கவும் யூடியூபர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். மோனாலிசா ருத்ராட்ச மாலைகளை விற்க செல்லும் போதெல்லாம் அவரை பலரும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதுமாக தொல்லை செய்ய தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் மோனாலிசாவின் தொழில் முற்றிலும் முடங்கியது. அவரால் இவ்வளவு கூட்டத்தில் ஒரு மாலை கூட விற்க முடியவில்லை. காலையில் இருந்து மாலை வரை தங்கள் சேனல்களை பிரபலமாக்க, தங்களது பின்தொடர்பவர்களை அதிகரிக்க மோனாலிசாவை பயன்படுத்திக் கொள்ள வரும் கூட்டம் அதிகமானது. இதனால் தன் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறியும், எவரும் நகர்வதாக இல்லை. அவ்வாறு புகைப்படம், வீடியோ எடுப்பவர்கள் அவரிடமிருந்து ஒரு மணி கூட வாங்குவதாக இல்லை. தங்கள் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருந்தனர் .
இந்நிலையில் மோனாலிசா தன் முகத்தை மூடிக் கொண்டு ருத்ராட்ச மாலைகளை விற்க முடிவு செய்தார். நேற்று மாலையில் மோனாலிசாவுடன் புகைப்படம் எடுக்க தேடி வந்தவர்கள், அவர் குடும்பத்தினரின் கூடாரத்தில் அத்து மீறி நுழைந்து விட்டனர். அங்குள்ள சிறுவர் சிறுமியர்கள் தடுத்தும் வலுக்கட்டாயமாக மோனாலிசாவுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். மோனாலிசா தன் முகத்தை முழுக்கவும் மூடிக் கொண்டார். அவருடைய அழகு அவருக்கே தொல்லையாகவும் மாறியது. அங்குள்ளவர்கள் அத்து மீறிய கூட்டத்தினை விரட்டி விட்டனர். இதையெல்லாம் அறிந்த மோனாலிசாவின் தந்தை அவரை இந்தூருக்கு அனுப்பி விட்டார். இந்த கும்பமேளாவை தனது அப்பாவி புன்னகையுடன் கடந்து சென்றார் மோனாலிசா!