
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இன்று இந்த ஆலைகளில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி ஆய்வு நடக்கவிருந்தது. இந்நிலையில் ஆய்வுக்கு பயந்து 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை அதன் உரிமையாளர்கள் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகாசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உலகளவில் புகழ்பெற்றவை. இதற்குப் பின்னால் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பு மறைந்திருப்பது பலரும் அறிந்ததே.
பல ஆண்டுகளாக பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நடப்பதும், பணியாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன. இதனால் வெகுண்டெழுந்த பசுமைத் தீர்ப்பாயம், இனி ஒரு பட்டாசு விபத்து நடக்கக்கூடாது எனவும், அதற்குரிய ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதுகுறித்து பசுமைத் தீர்ப்பாயம் கூறுகையில், “பட்டாசு ஆலைகள் தேவையான உரிமங்களைப் பெற்றுள்ளதா, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறதா, அடிக்கடி அங்க சோதனைகள் நடக்கின்றதா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது”.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய 15 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதன்படி இன்று பல்வேறு இடங்களில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதனைத் தெரிந்து கொண்ட ஆலை உரிமையாளர்கள், இன்று பட்டாசு ஆலைகளை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டாசு ஆலையை நடத்த வேண்டுமெனில் சில முக்கிய விதிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அப்படி பின்பற்றாத ஆலைகளை நிரந்தரமாக மூடவும் வாய்ப்புள்ளது என்பதற்கு பயந்து தான் 200-க்கும் மேற்பட்ட ஆலை உரிமையாளர்கள் இன்று பட்டாசு ஆலைகளை மூடியுள்ளனர்.
பொதுவாக ஒவெவொரு பட்டாசு ஆலையிலும் உள்ள அறைகள் 10-க்கு 10 என்ற அளவில் 4 வாசல்கள் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் ஒரு அறையில் 4 பேருக்கு மேல் பணிபுரியக் கூடாது. இதுபோன்ற சில விதிமுறைகளை பட்டாசு உரிமையாளர்கள் மீறுவதால் தான் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. ஆகையால் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற பட்டாசு ஆலைகளை மூட வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஆணையிட்டது.
ஆனால் அதிகாரிகள் தங்கள் ஆய்வைத் தொடங்குவதற்கு முன்பே ஆலைகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் பட்டாசு ஆலைகளில் நடக்கவிருந்த ஆய்வு தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.