
கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பால் கேரள மாநிலம் 2வது உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் உச்சகட்ட அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவர் தீவிர காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என சுகாதாரத் துறை சந்தேகித்தது. இதனால், அவருடைய இரத்த மாதிரிகளை சேகரித்து, மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். ஆய்ழவு முடிவில் இவரது உயிரிழப்புக்கு நிபா வைரஸ் தான் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மருத்துவர்கள் குழு.
இதன்மூலம் நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்பு மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நிபா வைரஸால் உயிரிழந்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. செல்போன் தொடர்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டாவதாக உயிரிழந்த நபருடன் 46 பேர் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் தேவையின்றி மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மலப்புரம், பாலக்காடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் திரிச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இம்மாவட்டங்களில் தீவிர காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் அறிகுறிகள் யாருக்கேனும் இருந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
நிபா வைரஸ் தொற்றின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பறவைகள் கடித்த பழங்களை பொதுமக்கள் யாரும் சாப்பிடக் கூடாது. ஏனெனில் நிபா வைரஸ் பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. எனவே மக்கள் வைரஸ் நோய் தொற்றில் இருந்து தங்களைத் தற்காத்து கொள்ள பழங்கள் (ம) காய்கறிகளை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் இதுவரை தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறது மருத்துவக் குழு. தற்காப்பு நடவடிக்கைகள் தான் நம்மைப் பாதுகாக்கும் கவசம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் விழ்புணர்வுடன் செயல்பட வேண்டிய தருணமிது என கேரள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.