நீலகிரி மாவட்டம் மசினகுடி வனச்சரகத்தில் 10 நாட்களில் 3 யானைகள் மரணம்..!!

வனவிலங்குகளிலேயே பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விலங்கான யானைகளின் இறப்பு தற்போது அனைவருக்கும் கவலை தருவதாக உள்ளது.
இந்திய யானைகள்
இந்திய யானைகள்
Updated on

“யானைகளைப் பாதுகாப்பது ஒரு விலங்கினத்தை பாதுகாப்பது அல்ல; மாறாக காடுகள், நீர்நிலைகள், தாவரங்கள் மற்றும் எண்ணற்ற உயிரினங்களைக் கொண்ட முழு சூழலையும் பாதுகாப்பதாகும்”. "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பார்கள். இப்படி வனவிலங்குகளிலேயே பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விலங்கான யானைகளின் இறப்பு (யானைகள் உயிரிழப்பு) தற்போது அனைவருக்கும் கவலை தருவதாக உள்ளது.

ஆம்..நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனச்சரகத்தில் (மசினகுடி வனச்சரகம், குதிரைப்பாறை, அரலட்டிக்கோட்டை மற்றும் மாவநல்லா பகுதிகளில்) கடந்த பத்து நாட்களில் அடுத்தடுத்து 3 பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம் தான் நமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையும் தந்துள்ளது.

யானைகளின் மரணத்திற்கு காரணமாக வயது மூப்பு, இயற்கை மரணம் மற்றும் சண்டை போன்ற காரணங்கள் ஆய்வில் கூறப்பட்டு இருந்தாலும் கடும் வறட்சி, தீவன மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இறந்த யானைகளின் உடல்களை மீட்டு தெப்பக்காடு வன கால்நடை மருத்துவர்கள் மூலமாகப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக இந்த வருடத்தின் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அணைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை வழக்கம் போலன்றி பொய்த்து மழை குறைந்துள்ளதால் அனைத்து அணைகள் மற்றும் நீரோடைகளும் தண்ணீர் இன்றி காய்ந்து காணப்படுகின்றன.

இதனால் மாயாறு மற்றும் மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும் வனப்பகுதிகளில் நிலவும் நீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகளுக்குத் தேவையான குடிநீரும் பசுந்தீவனமும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில்தான் கடத்த ஆகஸ்ட் எட்டாம் தேதி ஒரு யானையும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை 2 யானைகள் என மொத்தம் மூன்று யானைகள் கடந்த 10 நாட்களை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானைகள் உயிரிழப்பு
யானைகள் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாடு வனத்துறை வெளியிட்ட ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புத் தகவல்கள் படி தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் மொத்தம் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் காப்பகங்களில் மட்டும் மாநிலத்தின் மொத்த யானைகளில் 70% முதல் 80% வரை வாழ்கின்றன.முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் யானைகளின் அடர்த்தி மிக அதிகம் என்றாலும் இது போன்ற எதிர்பாராத மரணங்களால் இனி யானைகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்களைக் கொண்ட வெள்ளை யானை நாடு!
இந்திய யானைகள்

இது போன்ற வறட்சி தருணங்களில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வனப்பகுதிகளில் உள்ள செயற்கை நீர்தொட்டிகளில் உடனடியாகத் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

தீவனத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசும் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதைகளைப் பரப்புதல், காடுகளை புதுப்பித்தல், நீர்நிலைகளை உருவாக்குதல், உணவுச் சங்கிலியை சமநிலைப்படுத்துதல், காடுகளுக்கு இடையிலான இணைப்பை பராமரித்தல், பல உயிரினங்களுக்கு வாழிடத்தை உருவாக்குதல் என எல்லா விதங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் யானைகளின் பங்கு மிக முக்கியமானது என்பதாலேயே யானைகள் “காட்டின் பொறியாளர்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

யானைகள் இல்லாத காடு, அதன் இயற்கைச் சமநிலையையும் உயிரினப் பல்வகைமையையும் இழக்கக்கூடும். எனவே யானைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு விலங்கினத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; முழு காட்டு சூழலையும் பாதுகாப்பதாகும்.

இதையும் படியுங்கள்:
யானை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி : இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! வனத்துறையின் மாஸ் பிளான்!
இந்திய யானைகள்

இதை புரிந்து இந்த காட்டின் பொறியாளர்களை காக்க வேண்டியது நமது நாட்டின் கடமை.

logo
Kalki Online
kalkionline.com