பிரிட்டன் மற்றும் வேல்ஸ் நாடுகளில் மிகவும் பிரபலமான பெயராக முஹமட் முதலிடத்தில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டன் மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் எந்த பெயர் அதிகம் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது என்ற கணக்கு எடுக்கப்பட்டும். அந்தவகையில் அந்த இரண்டு நாடுகளில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைகளுக்கு பெரும்பாலும் முஹமட் என்றே வைத்துள்ளனர். அந்த இரு நாடுகளையும் சேர்த்து முஹமட் என்ற பெயரை சுமார் 4,661 ஆண் குழந்தைகளுக்கு வைத்திருக்கின்றனர்.
பிரிட்டனின் தேசிய புள்ளி விவரத்தின்படி இதுவரை நோவா என்ற பெயரே மிகவும் பிரபலமான பெயராக இருந்து வந்தது. அந்தவகையில் தற்போது இந்த பெயரை முஹமட் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இது வரலாற்றில் முதல்முறையாகும்.
கடந்த 2022ம் ஆண்டு முஹமட் என்ற பெயர் இரண்டாம் இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் மொஹமெட் ( ஒரே ஒலி ஆனால் மாறுபட்ட எழுத்துக்கள்) கொண்ட பெயர் கூட இந்த பட்டியலிலேயே வரவில்லை.
முஹமட் என்ற பெயர் முதல் இடத்தில் பிரபலமானதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. ஆனால், அங்கு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்கூட இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் புகழ்பெற்ற வீரர்கள் மற்றும் பிரபலங்களில் நிறைய பேரின் பெயர் முஹமதாக இருப்பதால்கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, தற்போதைய லிவர்பூல் கோ மன்னன் மொஹமட் சலா மற்றும் மாரத்தான் வீரர் மொஹமட் ஃப்ரா போன்றவர்களின் பெயர்களால் கூட இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆண் பெயர்களில் முஹமட் என்பதுபோல பெண் பெயர்களில் ஒலிவியா என்ற பெயர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
முஹமட் என்ற பெயர் வரலாற்றில் முதல் முறை பிரபலமான பட்டியலில் முதல் இடத்தில் வந்தாலும், எது ஆச்சர்யப்பட வேண்டிய ஒன்று என்றால், கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தில் முஹமட் என்ற இஸ்லாமிய பெயர் பிரபலமாகவுள்ளதுதான்.
இந்தியாவில் கூட முஹமட் என்ற பெயரை அதிகம் கேட்கலாம். ஆனால், இங்கு ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைவரும் இருப்பதால், எந்த பெயர் பிரபலமானது என்று கணிப்பது சற்று கடினம்தான்.