
டம்ளரைக் கீழே வை; ரிலாக்ஸ்:
மன அழுத்ததைப் போக்குவது எப்படி என்பதை விளக்கும் பயிற்சியாளர் தனது பயிற்சிக்கு வந்த அவையோரிடம் ஒரு டம்ளர் தண்ணீரை நிரப்பி விட்டுக் கேட்டார்:
“இந்த தண்ணீர் நிரம்பிய டம்ளர் எவ்வளவு கனமாக இருக்கும். சொல்ல முடியுமா?”
கூட்டத்தினர் ஆளுக்கு ஒரு பதிலை ஊகமாகச் சொன்னார்கள்.
200 கிராமிலிருந்து 400 கிராம் வரை பதில் வெவ்வேறாக இருந்தது.
உடனே பயிற்சியாளர் கூறினார்: “நல்லது, இதனுடைய கனம் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை. இதை எவ்வளவு நேரம் நீங்கள் கையில் வைத்திருக்க முடியும் என்பது தான் முக்கியமான விஷயம். ஒரு நிமிடம் இதை நீங்கள் வைத்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு மணி நேரம் இதை நீங்கள் பிடித்திருந்தால் உங்கள் வலது கை வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் வைத்திருந்தாலோ நீங்கள் ஒரு ஆம்புலன்ஸைத் தான் கூப்பிட வேண்டியிருக்கும்.”
இப்படிக் கூறி விட்டு அவர் மேலும் தொடர்ந்தார்: “கனம் அதே தான்; ஆனால் அதிக நேரம் அதை வைத்திருக்க வைத்திருக்க பளு அதிகமாகிறது. அதே போலத் தான் மன அழுத்தமும். உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அதிக நேரம் மனதில் சுமந்திருக்க சுமந்திருக்க அவற்றின் தீவிரம் அதிகமாகி உங்களை வெகுவாகப் பாதிக்கும். கிளாஸ் டம்ளரை எப்படி கீழே வைக்கிறீர்களோ அதே போல பிரச்சினைகளை சற்று மனதிலிருந்து கழட்டி கீழே வைத்து ரிலாக்ஸாக இருங்கள். ஆபீஸ் கவலைகளை வீட்டிற்குக் கொண்டு வராதீர்கள். அது ஆபீஸிலேயே இருக்கட்டும். ரிலாக்ஸ் ஆன பின்னர் அதை மீண்டும் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். வலியே இருக்காது!”
குப்பைக் கூடையைத் தூக்கிப் போடு:
நண்பர் ஒருவரின் அனுபவம் இது.
ஒரு நாள் அவர் டாக்ஸி ஒன்றில் ஏறி ஏர்போர்ட்டிற்குச் செல்ல விழைந்தார். டாக்ஸி டிரைவர் வண்டியைக் கிளப்பினார். அப்போது திடீரென்று ஒருவன், நிறுத்தி இருந்த தன் காரைக் கிளப்பி, டாக்ஸியின் முன்னே விரைந்து ஓட்டி மோத வருவது போல வந்தான். டாக்ஸி டிரைவர் ‘சடன் பிரேக்கைப்’ போட்டு வண்டியை நிறுத்தினார். நல்ல வேளையாக வண்டி மோதவில்லை. அந்தக் காரை எடுத்தவன் தலையை வெளியில் நீட்டி டாக்ஸி டிரைவரை நோக்கிக் கண்டபடி திட்டினான்.
நண்பரின் டாக்ஸி டிரைவரோ அவனைப் பார்த்து புன்னகைத்து, அவனை நோக்கிக் கையை அசைத்தார். நண்பருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. 'திடீரென்று காரைக் கிளப்பியவன் அவன் தான். அவன் டாக்ஸி டிரைவரைப் பார்த்து திட்ட வேறு செய்கிறான். அதற்கு பதிலாக இவரோ புன்னகை செய்து கையை அசைக்கிறார். இது என்ன விநோதம்!' என்று அவர் நினைத்தார்.
கேட்கவும் செய்தார்: “இது என்ன அநியாயம். அவனை பதிலுக்கு திட்ட வேண்டாமா , நீங்கள்?” என்றார்.
டாக்ஸி டிரைவர் அதற்கு பதில் கூறினார்: “சார்! உலகத்தில் நிறைய பேர் இப்படித்தான் குப்பைக் கூடையாக இருக்கிறார்கள். அவர்கள் மனம் முழுவதும் அழுக்கு, குப்பை, எரிச்சல், ஏமாற்றம் இவற்றால் நிரம்பிக் கிடக்கிறது. அவர்களின் குப்பைக் கூடை நிரம்பி வழியும் போது அதை உங்கள் மீது வாரி இறைப்பார்கள். அதை கண்டு கொள்ளக் கூடாது. சிரியுங்கள், கையை அசைத்து அவர்களுக்கு விடை கொடுங்கள், உங்கள் வழியைப் பார்த்து நீங்கள் செல்லுங்கள்.
வாழ்க்கைக்கான நல்ல படிப்பினையை அந்த டாக்ஸி டிரைவர் நண்பருக்குத் தந்தார்.
குப்பைத் தொட்டி நிரம்பும் போது வீசி எறிபவர்களின் குப்பையை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வது சிறிது காலம் தான். அதில் பத்து சதவிகிதம் தான் நீங்கள் உருவாக்குவது; மீதி தொண்ணூறு சதவிகிதம் வருவதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது!
கூலாக இரு!
பிரபல கணித மேதையும் தத்துவஞானியுமான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (பிறப்பு: 18-5-1872 இறப்பு: 2-2-1970) ஒரு முறை ஆஸ்லோவிலிருந்து ட்ராண்டெய்முக்கு ஒரு கப்பல் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். திடீரென்று அந்த விமான எஞ்சின் பழுதடையவே அது கடலில் விழுந்து அதில் பயணித்த 19 பயணிகளும் இறந்தனர். அவர்கள் யாரும் புகைபிடிப்பவர்கள் இல்லை. ஆனால் புகை பிடிக்கும் பழக்கமுள்ள ரஸ்ஸல் வாயில் பைப்பை வைத்து புகைபிடித்தவாறே கடலில் விழுந்தார். அவரை நார்வே படகு ஒன்று மீட்டது. 76 வயதான அவர் பிழைத்ததை உலகமே ஆச்சரியத்துடன் கொண்டாடியது. அவரைப் பார்த்து ஒருவர் கேட்டார் : ”கடலில் விழுந்த போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?” என்று.
அதற்கு ரஸ்ஸல் பதில் சொன்னார்: “என்ன, இந்தத் தண்ணீர் இவ்வளவு ஜில்லிப்பாக இருக்கிறதே” என்று நினைத்தேன்.
ஆபத்து வரும் போது அதை எதிர்கொண்டு கூலாக இருக்க வேண்டும் அந்த தத்துவ ஞானியைப் போல!
பிரச்சினைகள் நிரம்பிய வாழ்க்கையை கூலாகக் கடக்க இதுதாங்க வழி!